எழுத்துச் சாரியைகள்

காரம், கரம், கான் -என்பன எழுத்துச் சாரியைகள். காரச் சாரியை ஒன்றே
தமிழுக்கும் ஆரிய மொழிக்கும் பொதுவான சாரியை. காரச்சாரியை ஒன்றே உயிர்
மெய் எல்லாவற்றுக்கும் வரும்.
வருமாறு : ஆகாரம், ஈகாரம், ஊகாரம்……….. ஓளகாரம், அகாரம்,
ககாரம்.
காரம், கரம், கான்- என்ற மூன்றும் உயிர்க்குறிலுக்கும் உயிர்மெய்க்
குறிலுக்கும் வரும்.
எ-டு: அகாரம், அகரம், அஃகான்; மகாரம், மகரம், மஃகான். (குறில்
கான்சாரியை பெறுங்கால் இடையே ஆய்தம் வருதல் கொள்ளப்படும்.)
ஐ, ஒள- என்பன கான்சாரியையும் பெற்று ஐகான், ஒளகான் – என வரும்.
ஆனம், ஏனம், ஓனம் – என்ற எழுத்துச்சாரியைகளும் உள. உயிர்மெய்
நெடிலுக்குச் சாரியை இல்லை. (தொ. எ. 134- 137 நச். உரை)
மெய் பதினெட்டும் அகரத்தையும், நெட்டுயிர் ஏழும் காரத்தையும், ஐகார
ஒளகாரங்கள் காரத்துடனே கானையும், உயிரும் உயிர்மெய்யுமான
குற்றெழுத்துஐந்தும் காரம், கான்- இவற்றுடனே கரம் என்பதனையும்
சாரியையாகச் சார்ந்து நடக்கும். (நன். 125 மயிலை.)