எழுத்துக்களுக்கு வெவ்வேறு ஒலி உண்டாவதன் காரணம்

சுவாசப்பையினின்று வெளிப்படும் வளி அடியண்ணம் முதலிய இடங்களில்
படுகையில் நாவின் செய்கையால் வெவ்வேறு எழுத்தொலி ஆகின்றது.
வெவ்வேறுவகை ஒலி உண்டாவதன் காரணம் ஐந்து. அவை 1. உள்முயற்சி, 2, வெளி
முயற்சி, 3. கூட்டம், 4. வழி வேறுபாடு, 5. இட வேறுபாடு – என்பன.
உள்முயற்சி: உள்நின்று எழும் வளியை வெளியே விடும்போது, நாவின் நுனி
இடை அடிவிளிம்பு – ஆகியவற்றுள் ஒன்றனால் வளியை அடியண்ணம் இடையண்ணம்
முதலிய இடங்களில் தடுத்தும் தடுக்காமலும் வெளிவிடுதல் கூடும்.
தடுக்கும்போது சிறிதளவு தடுத்தலால் இடையினமெய்களும், முழுதும்
தடுத்தலால் வல்லின மெல்லின மெய்களும், தடுக்காமல் விடுவதால்
உயிரெழுத்துக்களும் தோன்றுகின்றன.
வெளிமுயற்சி- வளியை வெளிவிடும்போது நம் குரல்வளை யின்
இருபக்கத்தும் உள்ள ஐவ்வுகள் பிரிந்து விரிந்தும், சேர்ந்து
சுருங்கியும், நாதஒலியையும் சுவாச ஒலியையும் உண்டாக்கும்.
வல்லெழுத்துக்கள் சுவாச காரியம், மற்ற எல்லா எழுத்துக் களும்
நாதகாரியம்.
கூட்டம்: ஓரொலியில் மற்றோர் ஒலியையும் ஒருங்கு சேர்த்தல். செம்பும்
ஈயமும் சேர்ந்து வெண்கலமாவது போலப் பிரிக்கமுடியாதபடி ஒன்றேயாய்,
இரண்டொலியின் சேர்க்கையால் ஓரொலியேயாய் அமையும் தமிழ் ஐகார ஒளகாரங்கள்
இப்பகுப்பைச் சார்ந்தன என்ப.
வழி வேறுபாடு: உள்நின்று வெளிப்படும் வளி வெளியே வரும் வழிகளின்
வேறுபாடு. அண்ணம் வரை வரும் வளியை அதற்குமேல் வாய்வழியாகவோ
மூக்குவழியாகவோ வெளி விடுதல் கூடும். வல்லினம் நீங்கலான ஏனைய
எழுத்துக்களை ஒலிக்கும்போது குரல்வளையின் துவாரம் சுருங்கச் செய்து
சிறிது சிறிதாக வெளிவரும் வளியை மூக்கின் வழியாக வெளிவிட்டால் அவ்வளி
மெல்லினம் ஆகும். வடமொழியில் உயிர், ய வ ல-க்களும் மூக்கின் வழியாக
வெளிவருதலுமுண்டு. அவை அநுநாஸிகம் எனப் பெயர் பெறும்.
இட வேறுபாடு: எழுத்துப் பிறப்பதற்குரிய வாயின் உள் ளிடங்கள் ஆகிய
அடியண்ணம், இடையண்ணம், நுனி யண்ணம், நுனியண்ணத்தை அடுத்த இடம்
(வர்த்ஸம்), பல், பல்லின் மேலிடம், இதழ்- என்ற இடவேறுபாட்டானே
வல்லெழுத்தும் மெல்லெழுத்தும் ஆறு ஆறு ஆயின. (எ. ஆ. பக். 11-13)