எழுத்துக்களின் முறைவைப்பு (2)

சிறப்பு, இனம் – என்ற இரண்டு காரணத்தானும் ஒன்றன் பின் ஒன்றாக
எழுத்துக்கள் அகர முதலாக னகரம் ஈறாக வழங்கி வருதலே எழுத்துக்கள்
நிற்கும் முறையாம். தனித்தியங்கும் ஆற்றலுடைய உயிரெழுத்துக்கள்
அவ்வாறு இயங்கும் ஆற்றல் இல்லாத மெய்யெழுத்துக்களுக்கு முன்
நிற்கின்றன. உயிரெழுத்துக்களுள்ளும், குற்றெழுத்துக்கள் அவற்றது
விகாரமாகிய நெட்டெழுத்துக்களுக்கு முன்நிற்கின்றன. மெய்
யெழுத்துக்களுள், வலியார் மெலியவர்களுக்கு முன் நிற்பது போல,
வல்லெழுத்துக்கள் மெல்லெழுத்துக்களுக்கு முன் நிற்கின்றன. இவை
நிற்குமுறை சிறப்பு எனும் காரணம் பற்றியது. குற்றெழுத்துக்களை அடுத்து
அவற்றின் இனம் ஒத்த நெட்டெழுத்துக்கள் முறையே நிற்பதும்,
வல்லெழுத்துக்களை அடுத்து அவற்றின் இனம் ஒத்த மெல்லெழுத்துக்கள்
முறையே நிற்பதும் இனம் என்னும் காரணம் பற்றியன. (நன். 73)
“உயிர்களுள் அ இ உ – என்பன முறையே அங்காந்து கூறும் முயற்சியானும்,
அவ்வங்காப்போடு அண்பல்லடி நாவிளிம் புறக் கூறும் முயற்சியானும்,
அவ்வங்காப்போடு இதழ் குவித்துக் கூறும் முயற்சியானும் பிறத்தலான்,
அப்பிறப்பிடத்து முறையே முறையாக வைக்கப்பட்டன. ஆகார ஈகார ஊகாரங்கள்
அகரம் முதலியவற்றிற்கு இனம் ஆதலின், அவற்றைச் சார வைக்கப்பட்டன.
நெட்டெழுத்தாவது நீரும் நீரும் சேர்ந்தாற் போலக் குற்றெழுத்து இரண்டு
ஒத்து நின்று நீண்டிசைப்ப தொன்று ஆதலின், அஃது உணர்ந்து கோடற்குக்
குற்றெழுத்துக் களின் பின்னர் நெட்டெழுத்துக்கள் வைக்கப்பட்டன. இனி
எகரமாவது அகரக் கூறும் இகரக்கூறும் தம்முள் ஒத்திசைத்து நரமடங்கல்
போல் நிற்பதொன்று ஆகலானும், ஒகரமாவது அகரக்கூறும் உகரக் கூறும்
தம்முள் ஒத்திசைத்து அவ்வாறு நிற்பதொன்று ஆகலானும், அவை அவற்றின்
பின்னர் முறையே வைக்கப்பட்டன. ஏகார ஓகாரங்கள் இனம் ஆகலின், அவற்றின்
பின் முறையே வைக்கப் பட்டன. அகரமும் யகரமும் இகரமும் தம்முள்
ஒத்திசைத்து நிற்பதொன்று ஆதலின் எகர ஏகாரங்களின் பின்னர் ஐகாரமும்,
அகரமும் வகரமும் உகரமும் தம்முள் ஒத்திசைத்து நிற்பதொன்று ஆகலின் ஒகர
ஓகாரங்களின் பின்னர் ஒளகாரமும் வைக்கப்பட்டன. இவ்வாறாதல் பற்றி ஏ ஓ ஐ
ஒள – என்னும் நான்கினையும் வடநூலார் சந்தியக்கரம் என்ப. கையடனார்
நரமடங்கல் போல் என்று உவமையும் கூறினார். இக்கருத்தே பற்றி ஆசிரியர்
‘அகர இகரம் ஐகாரம் ஆகும்’ எனக் கூறி, ஐ என்னும் நெட்டெழுத்தின் வடிவு
புலப்படுதற்கு, அகர இகரங்களே அன்றி அவற்றிடையே யகரமும் ஒத்து
இசைக்கும் என்பார், ‘அகரத் திம்பர் யகரப் புள்ளியும், ஐயென்
நெடுஞ்சினை மெய் பெறத் தோன்றும்’ என்றும், ‘மெய்பெற’ என்ற இலேசானே, ஒள
என்னும் நெட்டெழுத்தின் வடிவு புலப்படுதற்கு அகர உகரங்களே அன்றி
அவற்றிடையே வகரமும் ஒத்திசைக்கும் என்றும்……‘இகர யகரம் இறுதி
விரவும்’ என்றும் கூறினார்.
“இனி, கங – க்களும் சஞ-க்களும் டண-க்களும் தந-க்களும் பம-க்களும்
அடிநா அண்ணம் – இடைநா அண்ணம் – நுனிநா அண்ணம் – அண்பல் அடி – இதழ் –
என்னும் இவற்றின் முயற்சி யால் பிறத்தலான், அப்பிறப்பிடத்தின் முறையே
முறையாக வைக்கப்பட்டன. வலியாரை முன் வைத்து மெலியாரைப் பின் வைத்தல்
மரபாகலின், வல்லெழுத்துக்கள் முன்னும் அவ்வவற் றிற்கு இனம் ஒத்த
மெல்லெழுத்துக்கள் அவ்வவற்றின் பின்னு மாக வைக்கப்பட்டன. அவ்விரண்டும்
நோக்கியல்லது இடை நிகரனவாய் ஒலித்தல் அறியப்படாமையின் அது பற்றி இடை
யெழுத்துக்கள் அவ்விரு கூற்றிற்கும் பின் வைக்கப்பட்டன.
“ழகர றகர னகரங்கள் மூன்றும் தமிழெழுத்து என்பது அறிவித்ததற்கு
இறுதிக்கண் வைக்கப்பட்டன. அவற்றுள்ளும் ழகரம் இடையெழுத்தாகலின்,
அதுபற்றி இடையெழுத்தொடு சார்த்தி அவற்றிறுதிக்கண் வைக்கப்பட்டது.
வடமொழியில் லகாரம் ளகாரமாகவும் உச்சரிக்கப் படுவதன்றி தனியே ஓரெழுத்து
அன்மையின், அச்சிறப்பின்மை பற்றி இடை யெழுத்தாகிய ளகாரம்
ழகாரத்திற்கும் பின் வைக்கப்பட்டது. யரலவ-க்கள் நான்கும் முறையே
அடியண்ணமும் இடை யண்ணமும் அண்பல்முதலும் இதழும் என்னும் இவற்றின்
முயற்சியால் பிறத்தலான், அப்பிறப்பிடத்து முறையே முறை யாக
வைக்கப்பட்டன.” (சூ. வி. பக். 22-25)
உயிரெழுத்துக்கள் தனித்து இயங்கும் இயல்பின ஆதலின், அவை அவ்வியல்பு
இல்லாத மெய்யெழுத்துக்கட்கு முன் வைக்கப்பட்டன. அவற்றுள் அகரம், வேறு
முயற்சியின்றி வாய் அங்காந்து கூறப் பிறத்தலின் அச்சிறப்பு நோக்கி
முதற்கண் வைக்கப்பட்டது. அதனையே பின்னும் ஒரு மாத்திரையளவு நீட்டி
ஒலிக்கப் பிறத்தலின் ஆகாரம் அதன் பின் வைக்கப் பட்டது. மேல்,
குற்றெழுத்துக்களுக்குப் பின்னர் நெட்டெழுத் துக்களை நிறுத்தியதற்கும்
இவ்வாறே கொள்க. இகரம், மேற்பல்லின் அணிய இடத்தில் நாவிளிம்பு உறப்
பிறத்தலின் பிறப்பிடம் நோக்கி அதன்பின் வைக்கப்பட்டது. உகரம், இதழ்
குவித்து ஒலிக்கப் பிறத்தலின் பிறப்பிடம் நோக்கி இகரத்தின் பின்
வைக்கப்பட்டது. உயிரெழுத்துக்களுள் அ இ உ என்னும்மூன்றுமே
சிறப்புடையன; அதனானே அவை பொருள்களைச் சுட்டி உணர்த்த வரலாயின.எகரம்
இகரம் பிறக்குமிடத்தே பிறப்பது ஆகலானும், இகர ஒலியினது திரிபு
ஆகலானும் அச்சிறப்பின்மை நோக்கி உகரத்தின் பின் வைக்கப்பட்டது. ஐகாரம்
அகரமும் இகரமும் கூடிப் பிறப்பது ஆதலின், அஃது ஏகாரத்தின் பின்
வைக்கப்பட்டது. ஒகரம் உகரம் பிறக்குமிடத்தே பிறப்பது ஆகலானும், உகர
ஒலியினது திரிபு ஆகலானும், அகர இகரம் கூடிப்பிறக்கும் ஐகாரத்தின் பின்
வைக்கப்பட்டது. ஒளகாரம் அகரமும் உகரமும் கூடிப் பிறப்பது ஆதலின்,
ஓகாரத்தின் பின் வைக்கப்பட்டது. ஆகவே பிறப்பிடத்து முறையும்,
சிறப்பும் சிறப்பின்மையும் நோக்கியே உயிரெழுத்துப் பன்னிரண்டும்
வைக்கப்பட்டுள்ளன. இனி மெய்யெழுத்துக்களின் முறை வருமாறு:-
ககார ஙகாரங்கள் அடிநா அடியண்ணத்தை உறப் பிறத்தலின் முதலில்
வைக்கப்பட்டன. சகார ஞகாரங்கள் இடைநா இடை யண்ணத்தை உறப் பிறத்தலின்
அவற்றின் பின் வைக்கப் பட்டன. டகார ணகாரங்கள் நுனிநா நுனியண்ணத்தை
உறப் பிறத்தலின் அவற்றின் பின் வைக்கப்பட்டன. றகார னகாரங்கள்
நுனிநாக்கு மேல்வளைந்து சென்று அண்ணத்தை ஒற்றப் பிறத்தலின், டகார
ணகாரங்களை அடுத்து வைக்கப் படல் வேண்டும்; இவ்விரண்டு எழுத்துக்களும்
வடமொழியில் இல்லாமையின் ஈற்றில் வைக்கப்பட்டன. தகார நகாரங்கள்
மேற்பல்லின் அடியில் நாநுனி பரந்து ஒற்றப்பிறத் தலின் (றன-க்களின்
பின்னர் வைக்கப்படவேண்டுவனவாகவும்,
றன-க்கள் இறுதியில் வைக்கப்பட்டதனால்), டண-க்களின் பின்னர்
வைக்கப்பட்டன. பகார மகாரங்கள் இதழ்கள் சேரப் பிறத்தலின், தந-க்களின்
பின் வைக்கப்பட்டன. இவற்றால் அடியண்ணம் முதல் இதழ்வரையிலு முள்ள
இடங்களில் பிறத்தல் காரணமாக, கங – சஞ – டண – றன – தந – பம – க்கள்
முறையாய் அமைவனவாதல் காண்க. கங-க்கள் முதலிய வற்றுள் இரண்டிரண்டு
எழுத்துக்கள் ஓரோர் இடத்தில் பிறப்பன வாயினும், வல்லெழுத்துக்கள்
மார்பின் வளியால் பிறந்து வலியவாய் ஒலித்தலானும், மெல்லெழுத்துக்கள்
மூக்கின் வளியால் பிறந்து மெலியவாய் ஒலித்தலானும், அச் சிறப்பு நோக்கி
வல்லெழுத்துக்கள் முன்னும், சிறப்பின்மை நோக்கி மெல்லெழுத்துக்கள்
அவற்றின் பின்னும் வைக்கப் பட்டன. இனி இடையெழுத்துக்களின் முறை
வருமாறு:
மிடற்று எழுந்த வளி அண்ணம் சேர்ந்து பிறத்தலின், யகரம் முதலில்
வைக்கப்பட்டது. நுனிநாக்கு மேற்சென்று அண்ணத்தை வருடுதலான், ரகரமும்
ழகரமும் பிறப்பன எனினும், அவற் றுள்ளும் இடம் நோக்கி ழகரம் முன்னும்
ரகரம் அதன்பின் னும் வைக்கப்படல் வேண்டும். ஆயினும் ழகரம் வடமொழி யில்
இல்லாமையின், வடமொழியிலுள்ள இடையெழுத்துக் களின் பின் – அஃதாவது
யரலவ-க்களுக்குப் பின் – வைக்கப் பட்டது. ரகாரம் பிறப்பிடம் நோக்கி
(ழகாரத்தின் பின்னர்) வைக்கப்பட வேண்டுவதாயினும் ழகாரம் வகாரத்தின்
பின்னர் வைக்கப்பட்டதனான்) யகாரத்தின்பின் வைக்கப் பட்டது. ளகாரம்
நாவிளிம்பு தடித்து அண்ணத்தை வருடப் பிறத்தலின், அது ரகாரத்தின்
பின்னர் வைக்கப்பட வேண்டுவ தாயினும், வடமொழியில் தனியெழுத்தாக
இல்லாததனான், ழகரத்தின் பின்னர் வைக்கப்பட்டது. ழகாரம் ளகாரம் ஆகிய
இரண்டு எழுத்துக்களும் வடமொழியில் இல்லையாயினும், அவற்றுள்ளும்
பிறப்பிடம் நோக்கி ழகாரம் முன்னும் ளகாரம் பின்னுமாக வைக்கப்பட்டன.
நாவிளிம்பு தடித்து அண்பல் லடியை ஒற்றுதலான் லகாரம் பிறக்கின்றது
ஆகலின், அது ழகார ளகாரங்களின் பின்னர் வைக்கப்பட வேண்டுவதாயி னும்
அவ்விரண்டு எழுத்துக்களும் ஈற்றில் வைக்கப்பட்டமை யின், அது
ரகாரத்தின் பின்வைக்கப்பட்டது. வகரம் மேற்பல் லும் இதழும் இயையப்
பிறத்தலின், அது லகாரத்தின் பின்னர் வைக்கப்பட்டது. ஆகவே, இடையினங்கள்
ஆறும் பிறப்பிடம் காரணமாக, ய ழ ர ள ல வ – என வைக்கப்பட வேண்டுவன.
அவற்றுள் ழகார ளகாரங்கள் வடமொழியில் இல்லாமை கருதி ஈற்றில்
வைக்கப்பட்டன ஆகலின், ய ர ல வ ழ ள – என்று அமைந்துள்ளன. இவற்றால்,
அ, ஆ; க ங – இவை அடியண்ணத்திலும்,
இ, ஈ; ச ஞ ய – இவை இடையண்ணத்திலும் (தாலத்திலும்),
எ, ஏ, ஐ; ட, ண, ழ, ர – இவை நுனியண்ணத்திலும்,
ற, ன, (ள) – இவை நுனியண்ணத்தை அடுத்த இடத்திலும்,
த, ந, ல – இவை பல்லின் அடியிலும்,
உ, ஊ, ஒ, ஓ, ஒள, ப, ம, வ – இவை இதழிலும் பிறப்பனவாதல் தெளிவாகும்.
(எ. ஆ. பக். 7 -10)