எழுத்துக்களின் முறைவைப்பு (1)

“எழுத்துக்கட்கு எல்லாம் அகரம் முதலாதற்குக் காரணம் ‘மெய்யின்
இயக்கம் அகரமொடு சிவணும்” (தொ. எ. 46) என்பதனான் கூறுப.
வீடுபேற்றிற்குரிய ஆண்மகனை உணர்த் தும் சிறப்பான் னகரம் பின்
வைத்தார். இனி எழுத்துக்கட்குக் கிடக்கை முறை ஆயினவாறு கூறுதும்:
“குற்றெழுத்துக்களை முன்னாகக் கூறி அவற்றிற்கு இனமொத்த
நெட்டெழுத்துக்களை அவற்றின் பின்னாகக் கூறினார், ஒரு மாத்திரை கூறியே
இரண்டு மாத்திரை கூற வேண்டுதலின். அன்றி, இரண்டை முற்கூறினாலோ எனின்,
ஆகாது; ஒன்று நின்று அதனொடு பின்னரும் ஒன்று கூடியே இரண்டாவதன்றி
இரண்டு என்பதொன்று இன்றாதலின். இதனான் ஒன்றுதான் பலகூடியே எண்
விரிந்ததென்று உணர்க.
“இனி, அகரத்தின் பின்னர் இகரம் எண்ணும் பிறப்பும் பொருளும்
ஒத்தலின் வைத்தார். இகரத்தின் பின்னர் உகரம் வைத்தார், பிறப்பு
ஒவ்வாதேனும் ‘அ இ உ அம் மூன்றும் சுட்டு’ (தொ. எ. 31) எனச்
சுட்டுப்பொருட்டாய் நிற்கின்ற இனம் கருதி. அவை ஐம்பாற்கண்ணும்
பெரும்பான்மை வருமாறு உணர்க. எகரம் அதன்பின் வைத்தார், அகர இகரங்களொடு
பிறப்பு ஒப்புமை பற்றி. ஐகார ஒளகாரங்கட்கு இனமாகிய குற் றெழுத்து
இலவேனும் பிறப்பு ஒப்புமை பற்றி ஏகார ஓகாரங் களின் பின்னர் ஐகார
ஒளகாரம் வைத்தார். ஒகரம் நொ என மெய்யொடு கூடி நின்றல்லது தானாக
ஓரெழுத்தொருமொழி ஆகாத சிறப்பின்மை நோக்கி ஐகாரத்தின்பின் வைத்தார். அ
இ உ எ- என்னும் நான்கும் அக்கொற்றன் இக்கொற்றன் உக்கொற்றன் எக்கொற்றன்
– என மெய்யொடு கூடாமல் தாம் இடைச்சொல்லாய் நின்றாயினும் மேல் வரும்
பெயர்களொடு கூடிச் சுட்டுப்பொருளும் வினாப்பொருளும் உணர்த்தும். ஒகரம்
‘நொ’ என மெய்யொடு கூடியே தன் பொருளுணர்த்து வதல்லது தானாகப் பொருள்
உணர்த்தாது என்றுணர்க. இன்னும் அ ஆ, உ ஊ, எ ஏ, ஒ ஓ, – என்பன தம்முள்
வடிவு ஒக்கும். இ ஈ ஐ – தம்முள் வடிவு ஒவ்வா. இன்னும் இவை
அளபெடுக்குங்கால், நெட்டெழுத்தொடு குற்றெழுத்திற்கு ஓசை
இயையுமாற்றானும் உணர்க. இனிச் சுட்டு நீண்டு ஆகார ஈகார ஊகாரங்கள்
ஆதலானும் பொருள் ஒக்கும். புணர்ச்சி ஒப்புமை உயிர்மயங்கியலுள்
பெறுதும். இம்முறை வழுவாமல் மேல் ஆளுமாறு உணர்க.
“இனி, ககார ஙகாரமும், சகார ஞகாரமும், டகார ணகாரமும், தகார
நகாரமும், பகார மகாரமும் தமக்குப் பிறப்பும் செய்கையும் ஒத்தலின்,
வல்லொற்றிடையே மெல்லொற்றுக் கலந்துவைத்தார். முதல் நாவும்
முதலண்ணமும், இடைநாவும் இடையண்ணமும், நுனிநாவும் நுனியண்ணமும்
நுனிநாவும் அண்பல் முதலும் உறுதலும், இதழ்இயைதலும் ஆகிப் பிறக்கின்ற
இடத்தின் முறைமை நோக்கி அவ்வெழுத்துக் களைக் க ச ட த ப ங ஞ ண ந ம – என
இம்முறையே வைத்தார். பிறப்பு ஒப்புமையானும் னகாரம் றகாரமாய்த்
திரிதலானும் றகாரமும் னகாரமும் சேர வைத்தார். இவை தமிழெழுத்து என்பது
அறிவித்தற்குப் பின்னர் வைத்தார். இனி இடை யெழுத்துக்களில் யகாரம்
முன் வைத்தார், அதுவும் உயிர்கள் போல மிடற்றுப் பிறந்த வளி அண்ணம்
கண்ணுற்றடையப் பிறத்தலின். ரகாரம் அதனொடு பிறப்பு ஒவ்வாதேனும், செய்கை
ஒத்தலின் அதன்பின் வைத்தார். லகாரமும் வகாரமும் தம்மில் பிறப்பும்
செய்கையும் ஒவ்வாவேனும், கல்வலிது சொல்வலிது – என்றாற் போலத் தம்மில்
சேர்ந்து வரும் சொற்கள் பெரும்பான்மை என்பது பற்றி லகாரமும் வகாரமும்
சேர வைத்தார். ழகாரமும் ளகாரமும் ஒன்றானும் இயைபில வேனும் ‘இடையெழுத்
தென்ப யரல வழள’ (தொ. எ. 21) என்றால் சந்தவின்பத்திற்கு இயைபுடைமை
கருதிச் சேர வைத்தார்போலும்.” (தொ. எ. 1 நச். உரை)
எழுத்துக்களின் இனமும் முறையும்
என்ற தலைப்பில், இலக்கணவிளக்க நூலார் சுட்டும் முறைவைப்பினைக் கண்டு
கொள்க. (இ. வி. எழுத். 8 உரை)
(நன்னூல் விருத்தியுரை சூ.வி. உரையே.)