எழுத்துக்களின் முதலும் ஈறும்

தனிஎழுத்து ஒவ்வொன்றற்கும் அதுவே முதலும் ஈறும் ஆகும். உயிர்மெய்
எழுத்திற்கு ஒலித்த முறையே மெய் முதலும், உயிர் ஈறும் ஆகும்.
புணர்ச்சிக்கண், உயிர்மெய் முதலை மெய்முதல் எனவும், உயிர்மெய் ஈற்றை
உயிரீறு எனவும் கூறுதல் காண்க. அப்பொடு பெய்த உப்பே போல, உயிரொடு
புணர்த்திய மெய் தன் மாத்திரை தோன்றாது ஒன்றாய் நிற்றலின் உயிர்மெய்யை
ஓரெழுத்து என்றும், ஒலித்து நின்ற நெறியான் ஈரெழுத்து என்றும் கொள்ப.
‘உயிர்மெய்’ என்பது ஒலி வகையான் உம்மைத்தொகை, மாத்திரை வகையான்
உம்மைத்தொகை அன்மொழி. (நன். 109 சங்.)