உயிர்கள் போல மெய்களை இயக்குதலான் உயிர் என்றும், தமக்கு இனமாகி
ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்துக்களை நோக்கத் தாம் குறியவாய் ஓரளபு
இசைத்தலான் குறில் என்றும், தமக்கு இனமாகி ஓரளபு இசைக்கும் குற்றெழுத்
துக்களை நோக்கத் தாம் நெடியவாய் ஈரளபு இசைத்தலான் நெடில் என்றும்,
சுட்டுப்பொருளை உணர்த்துதலான் சுட்டு என்றும், வினாப் பொருளை
உணர்த்துதலான் வினா என்றும்,
மெய் போல உயிரான் இயங்குதலான் மெய் என்றும், மெல்லெழுத்தையும்
இடையெழுத்தையும் நோக்கத்தாம் வல்லென்று இசைத்தலானும் வல்லென்ற
தலைவளியான் பிறத்தலானும் வல்லெழுத்து என்றும், வல்லெழுத்தையும்
இடையெழுத்தையும் நோக்கத் தாம் மெல் லென்று இசைத்த லானும், மெல்லென்ற
மூக்குவளியான் பிறத்தலானும் மெல் லெழுத்து என்றும், மெல்லெழுத்தையும்
வல்லெழுத்தையும் நோக்கத் தாம் இடைநிகரவாய் ஒலித்தலானும், இடை நிகர்த்
தாய மிடற்று வளியான் பிறத்தலானும் இடையெழுத்து என்றும், தம்மால்
இயலும் சார்பெழுத்திற்குக் காரணமாகி முதல் நிற்றலான் முதலெழுத்து
என்றும், அவையே தம்மொடு தாம் சார்ந்தும் இடம் சார்ந்தும் பற்றுக்கோடு
சார்ந்தும் தோன்றலான் சார்பெழுத்து என்றும், ஓரளபு இசைக்கும் இகரஉகரம்
குறுகி அரையளபு இசைத்தலான் குற்றியலிகரம் குற்றியலுகரம் என்றும்,
அடுப்புக்கூட்டுப் போல ஆய்தவடி வாக எழுதப்படுதலின் ஆய்தம் என்றும்,
உயிரும் மெய்யும் கூடி ஒலித்தலான் உயிர்மெய் என்றும், உயிர் அளபெடுத்த
லான் உயிரளபெடை என்றும், ஒற்று அளபெடுத்தலான் ஒற்றளபெடை என்றும்,
ஈரளபு இசைக்கும் ஐகாரம் ஒளகாரம் குறுகி ஓரளபு இசைத்தலான் ஐகாரக்
குறுக்கம் ஒளகாரக் குறுக்கம் என்றும், அரையளபு இசைக்கும் மகரம்
குறுகிக் கால்அளபு இசைத்தலான் மகரக்குறுக்கம் என்றும், அ ஆ என்பன அ ஆ
என்று இசைத்தலான் அஆ என்றும் காரணக் குறி ஆயின. (இ. வி. எழுத். 7
உரை)