அ ஆ-க்கள் பிறப்பானும் செய்கையானும், அங்கு ஆங்கு என்னும்
பொருளானும் வடிவானும்; இ ஈக்கள் பிறப்பானும் செய்கையானும், இங்கு
ஈங்கு என்னும் பொருளானும்; உ ஊக்கள் பிறப்பானும் செய்கையானும்,உங்கு
ஊங்கு என்னும் பொருளானும் வடிவானும்; எ ஏக்கள் பிறப்பானும்
செய்கையானும், எவன் ஏவன் என்னும் பொருளானும் வடிவானும்; ஒ ஓ-க்கள்
பிறப்பானும் செய்கையானும் வடிவானும் ஒத்து ஓரினமாயின.
இன்னும் இவை அளபெடுப்புழி நெட்டெழுத்தொடு குற் றெழுத்திற்கு ஓசை
இசையுமாற்றானும் ஓரினமாம் என் றுணரப்படும். குற்றெழுத்துக்களை
முன்னாகக் கூறி அவற்றிற்கு இனம் ஒத்த நெட்டெழுத்துக்களை அவற்றின்
பின்னாகக் கூறினார், ஒருமாத்திரை கூறியே இரண்டு மாத்திரை கூற
வேண்டுதலின். அன்றி இரண்டை முன் கூறின் ஆகாது; ஒன்று நின்று அதனொடு
பின்னரும் ஒன்று கூடியே இரண் டாவதன்றி, இரண்டு என்பது ஒன்று இன்று
ஆதலின். இதனான் ஒன்றுதான் பலகூடி எண் விரிந்தது என்பது
உணரப்படும்.
கங-க்களும், சஞ-க்களும், டணக்களும், தந-க்களும், பம-க்களும்
முயற்சியானும் மாத்திரையானும் செய்கையானும்; யர-க்கள் இடத்தானும்
மாத்திரையானும் செய்கையானும், லவ-க்கள் இடத்தானும் மாத்திரையானும்,
‘கல்வலிது’ ‘சொல்வலிது’ – என்றாற் போலத் தம்மில் சேர்ந்து வரும்
சொற்கள் பலவாத லானும்; ழள-க்கள் இடத்தானும் மாத்திரையானும் ‘இடை
யெழுத் தென்ப யரல வழள’ என்றால் சந்தவின்பத்திற்கு இயைபு ஆதலானும்;
றன-க்கள் முயற்சியானும் மாத்திரை யானும் செய்கையானும் ஒத்து
ஓரினமாயின.
இனி எழுத்துக்களின் முறை வருமாறு:
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி, பகவன் முதற்றே உலகு’ எனத்
திருவள்ளுவர் உவமை கூறியவாற்றானும், கண்ணன் ‘எழுத்துக்களுள் அகரமாக
நிற்கின்றேன் யான்’ என்று உண்மை கூறியவாற்றானும், இறைவன் எல்லாப்
பொருளின் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்குமாறு எல்லார்க்கும்
ஒப்ப முடிந்தாற்போல அகரமும் எல்லா எழுத்தின்கண்ணும் கலந்து அவற்றின்
தன்மையாயே நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது ஆகலின்,
அச்சிறப்பு நோக்கி எல்லா எழுத்திற்கும் முன்னர் அகரம் வைக்கப்பட்டது.
அகரத்திற்கு இனமாகலின் அதன்பின்னர் ஆகாரம் வைக்கப்பட்டது. பிறப்பும்
செய்கையும் சுட்டுப் பொருட்டாதலும் அகரத்தோடு அளவும் ஒத்தலின் அதன்
பின்னர் இகரமும், அதற்கு இனமாதலின் அதன் பின்னர் ஈகாரமும்
வைக்கப்பட்டன. இடமும் செய்கையும் சுட்டுப் பொருட்டாதலும் இகரத்தோடு
அளவும் ஒத்தலின் அவற்றின் பின்னர் உகரமும், அதற்கு இனமாதலின் அதன்
பின்னர் ஊகாரமும் வைக்கப்பட்டன. இடமும் செய்கையும் உகரத் தோடு அளவும்
ஒத்தலின் அவற்றின் பின்னர் எகரமும், அதற்கு இனமாதலின் அதன்பின்னர்
ஏகாரமும் வைக்கப்பட்டன. பிறப்பும் செய்கையும் ஏகாரத்தோடு அளவும்
ஒத்தலின், தனக்கு இனமாகிய குற்றெழுத்து இன்றேனும், அதன் பின்னர்
ஐகாரம் வைக்கப்பட்டது. இடமும் செய்கையும் ஒத்தலின் அதன் பின்னர்
ஒகரமும், அதற்கு இனமாதலின் அதன்பின்னர் ஓகாரமும் வைக்கப்பட்டன.
பிறப்பும் செய்கையும் வடிவும் ஓகாரத்தோடு அளவும் ஒத்தலின், தனக்கு
இனமாகிய குற்றெழுத்து இன்றேனும், அவற்றின் பின்னர் ஓளகாரம்
வைக்கப்பட்டது.
இவ்வாறு உயிரெழுத்துக்கள் தம்முள் இயைய முறையே வைக்கப்பட்டன. இனி
மெய்யெழுத்துக்களின் முறை வைப்பு வருமாறு.
முதல்நாவும் முதலண்ணமும் உறப் பிறத்தலான் மெய்களில் முன்னர்க்
ககரமும், அதற்கு இனமாதலின் அதன்பின்னர் ஙகரமும், இடைநாவும்
இடையண்ணமும் உறப் பிறத்தலானும் அளவானும் ககரத்தோடு இடம் ஒத்தலானும்
அவற்றின் பின்னர்ச் சகரமும், அதற்கு இனமாதலின் அதன்பின்னர் ஞகரமும்,
நுனிநாவும் நுனியண்ணமும் உறப் பிறத்தலானும் அளவானும் சகரத்தோடு இடம்
ஒத்தலானும் அவற்றின் பின்னர் டகரமும், அதற்கு இனமாதலின் அதன்பின்னர்
ணகரமும், நுனிநாவும் அண்பல்முதலும் உறப் பிறத்தலானும் அளவானும்
டகரத்தோடு இனம் ஒத்தலானும் அவற்றின் பின்னர்த் தகரமும், அதற்கு
இனமாதலின் அதன்பின்னர் நகரமும், இதழியையப் பிறத்தலானும் அளவானும்
தகரத் தோடு இனம் ஒத்தலானும் அவற்றின் பின்னர்ப் பகரமும், அதற்கு
இனமாதலின் அதன்பின்னர் மகரமும் தம்முள் இயைய வைக்கப்பட்டன.
வல்லெழுத்துக்களை முன்னாகக் கூறி, அவற்றிற்குஇனம் ஒத்த
மெல்லெழுத்துக்களை அவற்றின் பின்னாகக் கூறி, இடை யெழுத்து ஆறனையும்
அவற்றின் பின்னாகக் கூறினார். வல்லெழுத்துள் நான்கும், மெல்லெழுத்துள்
மூன்றும், இடையெடுத்துள் இரண்டும் மொழிக்கு முதலாதல் நோக்கி
இம்முறைவைப்பு அமைந்தது. உயிர்கள் போல மிடற்றுப் பிறந்த வளி கண்ணுற்று
அடையப் பிறத்தலான், இடை யெழுத்துக்களுள் முன்னர் யகரமும், அதற்கு
இனமாதலின் அதன்பின்னர் ரகரமும், இடமும் அளவும் ஒத்தலானும்
சந்தவின்பத்திற்கு இயைபுடைமையானும் அவற்றின் பின்னர் லகரமும், அதற்கு
இனமாதலின் அதன் பின்னர் வகரமும், இடமும் அளவும் வகரத்தொடு முயற்சியும்
ஒத்தலானும் சந்தவின்பத்திற்கு இயைபுடைமையானும் அதன்பின்னர் ழகரமும்,
அதற்கு இனமாதலின் அதன்பின்னர் ளகரமும், அளவானும் ழகரம் போலத்
தமிழெழுத்து ஆகலானும் அவற்றின்பின்னர் றகரமும், அதற்கு இனமாதலின் அதன்
பின்னர் னகரமும் தம்முள் இயைய வைக்கப்பட்டன.
றகரனகரங்களை வல்லின மெல்லினங்களைச் சாரவையாது இறுதிக்கண் வைத்தமை,
அவை தமிழெழுத்து என்பது அறிவித்தற்கும், னகரம் வீடுபேற்றிற்குரிய
ஆண்மகனை உணர்த்தும் சிறப்புக் கருதியும் என்பது. (இ.வி.எழுத். 8
உரை)
(சூ.வி. கூறும் ‘எழுத்துக்களின் முறைவைப்பு (2)’ – காண்க.)