அல்+திணை=அற்றிணை, அஃறிணை.
நிலைமொழி ஈற்றில் லகரம் வர, வருமொழி முதலில் தகரம் வந்தால்,
நிலைமொழி ஈற்று லகரமும் வருமொழி முதல் தகரமும் றகரமாகத் திரியும்
என்பது விதி. லகரம் திரியாமையு முண்டு. (தொ.எ.149,369 நச்.)
நிலைமொழி ஈற்று லகரம் றகரமாகத் திரிதலேயன்றி ஆய்த மாகத்
திரியினும், அதனை லகரமாகத் கருதி வருமொழித் தகரத்தை றகரமாகத்
திரித்துக் கொள்வது. ‘திரிந்ததன் திரிபு அது’ என்ற நயமாம்.
திரிந்தது லகரம்; அதன் திரிபு ஆய்தம். திரிபாகிய ஆய்தத்தை லகரமாகவே
கருதிப் புணர்ப்பது அது என்பது.
‘மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும்’ என்று கூறிப் பின்னர் அறு
என்பது அகல் என்பதனொடு புணருமிடத்து ‘அறுஎன் கிளவி முதல் நீ டும்மே’
(தொ. எ. 458 நச்.) என்னாது, ‘ஆறுஎன் கிளவி முதல் நீ டும்மே’ என்றலும்,
(தொ. எ. 440 நச்.)
‘மூன்றன் முதல்நிலை நீடலும் உரித்தே
உழக்குஎன் கிளவி வழக்கக் தான’
(தொ. எ. 457 நச்.)
என்றலும் போல்வன திரிந்ததன் திரிபு அதுவாம்.
திரிந்தது ஆறு; அதன் திரிபு அறு; ஆறு என்பதும் அறு என்பதும்
ஒன்றே;
திரிந்தது மூன்று;அதன் திரிபு முன்று;மூன்று என்பதும் முன்று
என்பதும் ஒன்றே – என்று கருதி அமைக்கும் நயம் இது.
எனவே, இந்நயத்தால் ஆறு என்று கூறினும் அறு என்று கொண்டும், மூன்று
என்று கூறினும் முன்று என்று கொண்டும் பொருள் செய்யவேண்டும்
என்பது,
“அறு என்னாது ஆறு என்றார், திரிந்ததன் திரிபு அது என்னும்
நயத்தான்” (தொ. எ. 458 நச்.) (1 நச். உரை)