எழுத்துக்களது ‘திரிந்ததன் திரிபு அதுவும் பிறிதும்’ என்றல்

நெடுமுதல் குறுகும் மொழிகள் யான் யாம் நாம் நீ தான் தாம்- என்பன.
அவை ஆறனுருபும் நான்கனுருபும் ஏற்கும்போது. அகரச்சாரியை பெற்று,முறையே
என எம நம நின தன தம-என்றாகி, உருபுகளொடு புணரும்.
என+கு = வல்லெழுத்தை முதலாக உடைய வேற்றுமை யுருபு ஆதலின் இடையே
வல்லொற்று மிக்கு எனக்கு என்றாயிற்று.
என+அ = எனவ என்றாயிற்று (இடையே வகரம் உடம்படு மெய்).
என+அது =ஆறாம் வேற்றுமையுருபாகிய அது என்பதன்கண் உள்ள அகரம்,
நிலைமொழி(என்+அ=என-என்று) அகரச்சாரியை பெற்று நின்றமையின் கெட,
என+து=எனது என்றாயிற்று. நெடுமுதல் குறுகும் சொற்களின் ஈற்றில் வரும்
அகரமே கெடும் என்னாது, கெடுகின்ற அகரம் வேறே என்றல் ‘திரிந்ததன்
திரிபு அதுவும் பிறிதும்’ஆம்.
திரிந்தது – யான் ‘என்’ எனத் திரிந்தமை;
திரிந்ததன் திரிபு – ‘என்’ என்பது ‘என’ எனத் திரிதல்;
திரிந்ததன்திரிபு அதுவும் பிறிதும் எனல் – என்+அ=‘என’ என்றாகி,
அதனோடு அதுஉருபு சேரும்போது, முன்சேர்ந்த அகரச்சாரியை கெடாது அது
உருபின் அகரம் கெடும் எனல். (திரிபு அது; அகரப்பேறு; பிறிது;
‘அது’வின் அகரக்கேடு. இவ்விரண்டும் இப்புணர்ப்பில் உண்மை காண்க. (தொ.
எ. 161,114,115 நச்.) (தொ. எ. 1 நச். உரை)