உயிரளபெடை நான்கு மாத்திரைய ஆதலும், ஐகார ஒளகாரக் குறுக்கங்கள்
ஒன்றரை மாத்திரைய ஆதலும் ஆரிடத்துள்ளும் அவை போல்பவற்றுள்ளும் அருகி
வந்து செய்யுள் வழு வமைதியாய் முடிதலின் அவற்றை ஒழித்து,
எல்லார்க்கும் ஒப்ப முடிந்து பயின்று வருவன மூன்று மாத்திரையும்
ஒருமாத்திரையுமே ஆதலின் ‘மூன்று உயிரளபு’ என்றும், ‘ஒன்றே குறிலொடு ஐ
ஒளக் குறுக்கம்’ என்றும் கூறினார். குற்றியலுகரம் புணர்மொழி
இடைப்படின் குறுகிக் கால் மாத்திரை பெறுதல் உரையிற் கோடல் என்பதனால்
கொள்க. உயிர்மெய்க்கு அளவு கூறாதொழிந்தார், மேல் ‘உயிரளவாய்’ (89)
என்றலின். (நன். 99 சிவஞா.)
உயிரளபெடைமூன்றும், நெட்டெழுத்து இரண்டும், குற்றெழுத்து – ஐகார
ஒளகாரக் குறுக்கங்கள்- ஒற்றளபெடை – இவை தனித்தனி ஒன்றும்,
ஒற்றெழுத்து- குற்றியலிகரம்- குற்றியலுகரம் – ஆய்தம் – இவை தனித்தனி
அரையும், மகரக் குறுக்கம்- ஆய்தக் குறுக்கம்- இவை தனித்தனியே காலும்
மாத்திரை பெறும். உயிர்மெய்யின் மாத்திரை உயிர்மாத் திரையே ஆதலின்
உயிர்க்குறில் உயிர்நெடில் மாத்திரையே இவற்றிற்கும் ஆம். (நன்.
99)