எழுத்தல் இசை

எழுத்து ஓசையல்லாத ஏனைய ஓசைகளாகிய முற்கும் வீளையும் இலதையும்அநுகரணமும் முதலியன. அவை செய்யுட்கண் வந்தால் அவற்றையும் செய்யுள்நடைஅழியா மல் அசையும் சீரும் தளையும் அடியும் தொடையும் பிழையாமைக் கொண்டுவழங்கப்படும்.முற்கு – முக்குதல்; வீளை – சீழ்க்கை அடித்தல்;இலதை – கோழையை வெளிப்படுத்தல் : அநுகரணம் – போலச் செய்வது; அஃதாவதுவேறொன்று செய்வது போலச் செய்யும் ஒலிக்குறிப்பு; பறவை கத்துவதுபோலவும், விலங்கு ஒலிப்பது போலவும் ஒலித்தல் முதலியன.எ-டு : ‘மன்றலங் கொன்றை மலர்மிலைந் துஃகுவஃகென்று திரியும் இடைமகனே – சென்றுமறியாட்டை உண்ணாமல் வண்கையால் வல்லேஅறியாயோ அண்ணாக்கு மாறு’என ‘ உஃகுவஃகு ’ என்று வருதல் போல்வன. இவை இடைக் காடர் பாடிய ஊசிமுறியுள்காணப்படும். ‘ஊசிமுறி’ எழுத்தாணியால் முறையாக எழுதமுடியாத எழுத்தல்லாதஒலிகள் எழுதப்பட இயலாமல் ஓராற்றான் குறிப்பிடப்பட வேண்டுதலின் பெற்றபெயர். ஊசி – எழுத்தாணி; முறி – தடுமாறச் செய்தல். (யா. வி. பக். 395,396)