எழுத்ததிகாரம் என்பது எழுத்தினது அதிகரித்தலையுடையது என
அன்மொழித்தொகையாய் அப்படலம் முழுதுக்கும் காரணக் குறியாயிற்று.
எழுத்தினை நுதலி வரும் பல ஓத்தினது தொகுதியாகிய படலம் எழுத்ததிகாரம்
ஆயிற்று. எழுத்தினது அதிகாரத்தை யுடையது என்றவிடத்து,
‘எழுத்தினது’என்ற ஆறாம் வேற்றுமை ஏற்ற சொல் எழுவாயின் பொருளதாய்,
‘அதிகாரத்தையுடையது’ என்ற வினையைக் கொண்டு முடிந்தது. வேற்றுமை
வினைகொண்டு முடிவது காரகமாம். ஆறாவது நேராக வினையைக் கொண்டு முடியாது.
ஆகவே எழுவாயின் பொருளிலேயே அது வினை கொண்டு முடிந்தது. எழுத்ததிகாரம்
என்பது ஆறாவது வினைமுதற் பொருண்மை யின்கண் வந்த காரகமாம். (சூ. வி.
பக். 17)
எழுத்ததிகாரம் – எழுத்தை உணர்த்திய அதிகாரம் (இள. நச்.)
அதிகாரம் – முறைமை
எழுத்ததிகாரத்தில் எழுத்து இனைய என்றல், இன்ன பெயர என்றல், இன்ன
முறைமைய என்றல், இன்ன அளவின என்றல், இன்ன பிறப்பின என்றல், இன்ன
புணர்ச்சிய என்றல், இன்ன வடிவின என்றல், இன்ன தன்மைய என்றல் – என்ற
எட்டு வகையானும், எழுத்துக்களின் உண்மைத்தன்மை, குறைவு, கூட்டம்,
பிரிவு, மயக்கம், மொழியாக்கம், நிலை, இனம், ஒன்று பலவாதல், திரிந்ததன்
திரிபு அது என்றல், திரிந்ததன் திரிபு பிறிது என்றல், திரிந்ததன்
திரிபு அதுவும் பிறிதும் என்றல், நிலையிற்று என்றல், நிலையாது என்றல்,
நிலையிற்றும் நிலையாதும் என்றல் – என்ற எட்டு இறந்த பலவகையானும்
எழுத்து உணர்த்தப்பட்டது. (தொ. எ. 1 இள., நச். உரை)