எல்லீரும் என்னும் முன்னிலை உயர்திணைப்பெயர் அல்வழிப்
புணர்ச்சிக்கண் வன்கணம் வந்தவழி மகரம் இனமெல் லெழுத்தாகத் திரிந்தும்,
மென்கணம் வந்தவழி மகரம் குன்றி யும், இடைக்கணமும் உயிர்க்கணமும்
வந்தவழி இயல்பாகவும் புணரும்.
எ-டு : எல்லீருங் கடியீர், எல்லீருஞ் சிறியீர், எல்லீருந்
தீயீர் – மகரம் திரிதல்; எல்லீரு ஞான்றீர், எல்லீரு நல்லீர், எல்லீரு
மாண்டீர் – மகரம் கெடுதல்; எல்லீரும் யாவீர், வாரீர்,
எல்லீருமடைந்தீர் – இயல்பு.
எல்லீரும் என்பது உருபேற்குமிடத்து உம்மையை நீக்கி எல்லீர் என்று
நின்று நும்முச் சாரியை பெற்றுப்பின்னர் உருபும் உம்மையும் பெற்று,
எல்லீர்நும்மையும் எல்லீர் நும்மொடும் எல்லீர்நுமக்கும் – என்றாற்
போலப் புணரும். இது பொருட் புணர்ச்சிக்கும் ஒக்கும்.
எ-டு : எல்லீர்நுங்கையும், எல்லீர்நுஞ்ஞாணும், எல்லீர் –
நும்யாப்பும், எல்லீர்நும்மழகும் ;
உம்மையை நீக்கிச் சாரியை பெறாது உருபேற்று இறுதியில் உம்மை பெற்று,
எல்லீரையும் எல்லீரொடும் எல்லீர்க்கும்- என வருதலும் கொள்க. (தொ. எ.
191 நச். உரை) (நன். 246)