எல்லாம் என்னும் பொதுப்பெயர் புணருமாறு

எல்லாம் என்பது இருதிணைப் பொதுப்பெயர்களுள் ஒன்று. இது வேற்றுமைப்
புணர்ச்சிக்கண் அஃறிணையை உணர்த்தும் வழி வற்றுச்சாரியையும்,
உயர்திணையை உணர்த்தும்வழி நம்முச்சாரியையும் பெறும்; இறுதியில்
உம்மைச் சாரியை பெறும். உருபேற்றற்கண்ணும் இந்நிலை உண்டு; இயல்பு
கணத்து முன்னும் இஃதுண்டு.
எ-டு : எல்லாவற்றையும் – (தொ. எ. 189 நச்.); எல்லா நம்மையும் –
(தொ.எ. 190 நச்.); எல்லாவற்றுக் கோடும் – (தொ.எ. 322நச்.);
எல்லாநங்கால்களும் – (தொ. எ. 324 நச்.)
எல்லாவற்றுஞாணும், யாழும், உறுப்பும். (தொ. எ. 322 நச்.)
எல்லாநஞ்ஞாணும், எல்லாநம்யாழும், எல்லாநம்முறுப்பும் (தொ. எ. 324
நச்.)
அல்வழிக்கண் வற்றுச்சாரியை பெறாது இயல்பு ஆதலும், ஈறு கெடுதலும்,
வலிமெலி மிகுதலும், இறுதிக்கண் உம்முச் சாரியை பெறுதலும் நிகழும்.
வருமொழி இயல்புகணமாயின் எல்லாம் என்பதன் மகரம் கெட்டுப் புணரும்;
சிறுபான்மை இயல்பாகப் புணரும்.
எ-டு : எல்லாக் குறியவும் என ஈறுகெட்டு வலியும் உம்மும் மிக்கன;
எல்லாக் கொல்லரும் – ஈறு கெட்டு வலியும் உம்மும் மிக்கன; எல்லாங்
குறியரும் – ஈறு கெட்டு மெலியும் உம்மும் மிக்கன; எல்லா ஞாணும் யாழும்
வட்டும் அழகும் – ஈறு கெட்டு உம் மிக்கது; எல்லாம் வாடின, எல்லாம்
ஆடின என இயல்பு. எல்லா ஞான்றாரும், வணிகரும், அரசரும் என ஈறுகெட்டு
உம் மிக்கது. (தொ. எ. 322 -324 நச். உரை)