எருமை வெளி

இவ்வூரினரான ஒரு சங்ககாலப்‌ புலவர்‌ எருமை வெளியனார்‌ என ஊர்ப்பெயரால்‌ பெயர்‌ பெற்றார்‌. வெளி என்னும்‌ கூறு சில ஊர்ப்பெயர்களில்‌ அமைந்‌திருப்பதைக்‌ காணலாம்‌. நாகப்பட்டினத்துக்கு அருகே வடக்கு வெளி என்னும்‌ பெயருடைய ஊர்‌ ஒன்று உண்டு, சங்ககாலத்துப்‌ புலவர்களில்‌ இருவர்‌ வெளி என்னும்‌ பெயரையுடைய ஊரினராகத்‌ தெரிகிறது. எருமை வெளியனார்‌ என்பது ஒருவர் பெயர்‌. வீரைவெளியனார்‌ என்பது மற்றொருவர் பெயர்‌. அவ்விருவரும்‌ முறையே எருமைவெளியிலும்‌ வீரைவெளியிலும்‌ பிறந்தவர்‌ என்பது வெளிப்படை. எருமை வெளியனார்‌ மகனார்‌ கடவனார்‌ அகநானூற்றில்‌ 72ஆம்‌ பாடலையும்‌, எருமை வெளியனார்‌ அகநானூற்றில்‌ 13ஆம்‌ பாடலையும்‌, புறநானூற்றில்‌ 273, 303 ஆகிய பாடல்களைவும்‌ பாடியுள்ளனர்‌.