இரண்டடி இழிபாகப் பத்தடிப் பெருமையாக வருவதொரு கலியுறுப்பு.பாட்டிற்கு முகம் தரவு ஆகலானும், கால் சுரிதகம் ஆகலானும், ஏனையஉறுப்புக்கள் இடைநிலைப்பாட்டாகிய தாழிசையும் கொச்சகமும் அராகமுமாகக்கொள்ளக் கிடத்த லானும், எருத்து என்பது கழுத்தின் புறத்திற்குப்பெயராக வேண்டுமாகலான் அவ்வுறுப்புத் தரவைச் சார்ந்து கிடத்தல்வேண்டும்.‘தரவே எருத்தம் அராகம் கொச்சகம்அடக்கியல் வகையோடு ஐந்துறுப் புடைத்தே’(அகத்தியம்) என்பதனை நோக்கத் தரவும் எருத்தமும் வெவ்வேறுஉறுப்பெனவேபடுமேனும், தொல்காப்பியனா ருக்கு எருத்து என்பதும் தரவுஎன்பதும் ஒன்றேபோலும். (தொ. செய். 117 இள.)