எயினனூர்

புண்டரிகம் பொன் வரைமேல் ஏற்றிப் புவியளிக்கும்
தண் தரள வெண்கவிகைத் தார் வளவர் சோணாட்டில்
வண்டறை பூஞ்சோலை வயல் மருதத் தண்பணை சூழ்ந்
தெண்டிசையும் ஏறியசீர் எயின் மூதூர் எயினனூர்’
என, சேக்கிழார் பெரிய புராணம் எயினனூர் பற்றிக் குறிப்பிடுகிறது. எயின் மூதூர் என்ற சொல்லினால் அமைந்த ஊராக இருக்கலாம் என்பதனையே எயின் மூதூர் எயினனூர் என்ற ஆட்சி விளக்குகிறது. எயில் பெற்ற பழம் பதி என்பது தன் பொருள். உடைய மூதூர் மேலும் சோழ நாட்டைச் சார்ந்த மருதநில, செழிப்பு மிக்க தொரு இடம் என்பதும் இவண் விளங்குகின்றது. இதனைத் தவிர. எயில் பிறபகுதிகளையும் எயின் எனக் குறித்தனர் என்பதனை, கஞ்சாறூர் என்பதனை எயின் மூதூர் என்று குறிப்பிடும் நிலையும் ( பெரிய -18-36 ) பன்னிரண்டு பேர்படைத்த பூந்தராயில் நுழையும்போது ஏழிசையினுடன் பாடி எயின் மூதூர் உட்புகுந்தார் எனச் சுட்டும் தன்மையும் ( 34–1148 ) விளக்குகின்றன. இவ்வாறு எயில்பதிகள் மிகுதியாக இருக்கும் நிலையிற் சிறப்பாக இதனைச் சுட்டிய தன்மையினை நோக்க எயினர்கள் வாழ்ந்த பகுதியாக இது இருந்திருக்குமோ என்ற எண்ணமும் தோன்றுகிறது.