‘செய்ம்மன என்னும் தொழில்இறு சொல்லும்’
(தொ. எ. 210. நச்.)
‘செய்ம்மன செய்யும் செய்த என்னும்’
(தொ. சொ. 222 சேனா.)
‘இசைக்குமன சொல்லே’
(
தொ. சொ. 1)
என்று செய்ம்மன என்னும் வாய்பாடு ஒன்று தொல்காப்பியத் தில்
குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை வினைமுற்றுச் சொல் என்பர் சேனாவரையர்;
பெயரெச்சச் சொல் என்பர் நச்.
செய்யும் என்னும் வினைமுற்றுப் போலவே பண்டு வழங்கிய செய்(ம்) மன
என்னும் முற்றுச்சொல்லோடு ஆர்விகுதி சேரச் ‘செய்மனார்’ என்று ஆகும்.
அதே வாய்பாட்டினதாகும் என்மன என்னும் முற்றுச்சொல்லோடு ஆர்விகுதி சேர
என்மனார் என்று ஆகும்.
என்ப+மன்+ஆர்; என்ப என்ற முற்றுச்சொல்லின் பகரம் கெடுத்து, மன்
ஆர்- இவற்றை இணைக்க என்மனார் என்றாயிற்று என்று இளம்பூரணர், கல்லாடர்,
யாப்பருங்கல உரையாசிரியர், இறையனார் களவியல் உரையாசிரியர்
என்னுமிவர்கள் கொள்வர். சேனாவரையர் என் +மன்+ஆர் எனக் கொண்டு, மன்
எதிர்கால இடைநிலை என்னும் கருத்துடையார். (எ. ஆ. பக். 17)