எதிர்மறை

வினைநிகழ்ச்சி இன்மையைக் குறிப்பது எதிர்மறையாம். எதிர்மறையினை
ஆகாரஈறும், ஆ ஏ ஆல் இல் – என்ற இடை நிலைகளும் காட்டும். ஆகார ஈறும்,
அல் இடைநிலையும், ஆவும், ஏயும் முக்காலத்துக்கும் பொதுவாவன.
எ-டு: புலிகள் புல் உண்ணா – ஆகார ஈறு
(உண்+ஆ) முக்காலத்துக்கும் பொது.
அவன் உண்ணலன் – அல் இடைநிலை
(உண்+அல்+அன்) முக்காலத்துக்கும் பொது.
அவன் உண்ணான் – ஆகார இடைநிலை (உண்+(ஆ)+ஆன்) முக்காலத்துக்கும்
பொது
யான் உண்ணேன் – ஏகார இடைநிலை
(உண்+(ஏ)+ ஏன்) முக்காலத்துக்கும் பொது
உண்டிலன் – உண்+ ட்+ இல் + அன் – இறந்தகால எதிர்மறை;
உண்கின்றிலன் – உண் + கின்று + இல் + அன் – நிகழ்கால எதிர்மறை;
உண்கிலன் – உண் + க் + இல் + அன் – எதிர்கால எதிர்மறை.
மேலை மூன்றுவினைமுற்றுக்களிலும் கால இடைநிலை யோடு எதிர்மறை
யிடைநிலை ‘இல்’ புணர்ந்து வந்தவாறு. (வினை நிகழ்ச்சி இல்லனவற்றை உடையன
போலக் காலத் தொடு புணர்த்து உரைத்தல் இலக்கணையாம்.) (நன். 145
சங்.)