எண்ணுப்பெயர்களுக்குச் சிறப்பு விதி

எண்ணுப்பெயரும் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் பிறவும் வருமொழியாக
அமைய, நிலைமொழியாக ஒன்று முதல் எட்டு ஈறாம் எண்கள் நிற்பின், முதல்
இரண்டு எண்கள் முதல் நீளும்;மூன்று ஆறு ஏழு – என்பன முதல் குறுகும்;
ஆறு ஏழு – அல்லாதவற்றின் ஈற்றின் உயிர்மெய்யும், ஏழு என்ற எண்ணின்
ஈற்றுயிரும் கெடும். ஒன்று என்பதன் னகரஒற்று ரகர ஒற்று ஆகும்; இரண்டு
என்பதன் ணகர ஒற்றும் ரகரத்தை ஊர்ந்து நின்ற அகரமும் கெட, அவ்விரண்டு
ரகரத்தின் மேலும் உகரம் வருதலுமுண்டு. (ஆண்டு அவ்விரண்டு எண்களிலும்
முதலுயிர் நீடல் இல்லை என்க.) மூன்று என்னும் எண்ணின் னகரஒற்றுக்
கெடுதலும், வரும் ஒற்றாகத் திரிதலும் ஆம். நான்கன் ஒற்று லகரஒற்றும்
றகரஒற்றும் ஆம். ஐந்து என்பதன் ஒற்று வரு மொழி முதல் ஒற்றாகியும்,
அதற்கு இனமாகியும், கெட்டும் முடிவதாம். எட்டு என்பதன் டகரமெய்
ணகரமெய் ஆகும்.
வருமாறு : ஒன்று+ இலை, கோடு = ஓர் இலை (ஓரிலை), ஒரு கோடு;
இரண்டு + இலை, கோடு = ஈர் இலை (ஈரிலை) இருகோடு; மூன்று + ஒன்று = மூ
ஒன்று (மூவொன்று); மூன்று + கழஞ்சு, நாழி, வண்டு = முக்கழஞ்சு,
முந்நாழி, முவ்வண்டு; நான்கு + எடை, குணம் = நால்எடை (நாலெடை),
நாற்குணம்; ஐந்து + மூன்று, கழஞ்சு, எடை = ஐம்மூன்று, ஐங்கழஞ்சு, ஐ
எடை (ஐ யெடை); ஆறு + பத்து = அறுபது; ஏழு + கழஞ்சு = எழு கழஞ்சு,
ஏழ்கழஞ்சு; எட்டு + குணம் = எண்குணம் (நன். 188-193)