சொற்களைக் கூறுங்கால் பொருள் சிறக்கும் எழுத்தினை எடுத்தும், அயல்
எழுத்தினை நலிந்தும், ஏனைய எழுத்துக் களைப் படுத்தும் கூற வேண்டும்.
எடுத்தல் படுத்தல் முதலிய ஓசைகளும் எழுத்துச்சாரியையும்
தனித்தியங்கும் ஆற்ற லுடைய உயிர்க்கேயன்றி அவ்வாற்றல் இல்லாத மெய்க்கு
இல்லை.
வினைச்சொல்லும் வினைக்குறிப்புச் சொல்லும் பகுதியில் பொருள்
சிறந்து நிற்கும். பெயர்ச்சொல் அவ்வாறன்றி விகுதி யில் பொருள் சிறந்து
நிற்கும்.வினைச்சொற்கள் பகுதியில் பொருள் சிறத்தலின் விகுதிப்பொருள்
வேறு விளக்குதற்கு ‘உண்டான் சாத்தன்’ என்றாற்போலப் பெயர் ஒருதலையான்
வேண்டப்பட்டது. இனி, உண்டான் கரியான் என்னும் பெயர்ச்சொற்கள்
விகுதியில் பொருள் சிறத்தலின், அப்பொருளை விளக்குதற்கு வேறோர் பெயர்
வேண்டாது, ‘உண்டான் வந்தான்’ ‘கரியான் வந்தான்’ எனத் தாமே எழுவாயாய்ப்
பயனிலை கொண்டும், ‘கரியானைக் கொணா’ என உருபேற்றும் வரும். உண்டான்,
கரியான் முதலிய வினைச் சொற்களும் வேறு; உண்டான், கரியான் முதலிய பெயர்
களும் வேறு.
தொல்காப்பியனார் பெயர்களுள் வினைப்பெயர் என்ற பகுப்பைக்
கூறியுள்ளார். சேனாவரையர் அதற்கு “வருவார், செல்வார் என்பன; தச்சன்,
கொல்லன்- என்பனவும் அவை” என எடுத்துக்காட்டுத் தந்துள்ளார்.
“உண்டான்- தின்றான் – என்று படுத்துச் சொல்லப்படும் தொழிற்பெயர்,
வினைச்சொல் போலத் திணையும் பாலும் காலமும் முதலாயினவற்றை விளக்கி, அன்
ஆன் முதலிய ஈற்றவாய் வருதலின் தொழில்நிலையை ஒத்தன” என்றும் அவர்
தொ.சொ. 70ஆம் நுற்பாவில் கூறியுள்ளார். பண்பு அடியாக வரும் பெயர்
பண்புப்பெயர் என்றாற்போல, வினை அடியாக வரும் பெயர் வினைப்பெயர் என்பதே
சேனா வரையர் கருத்து.
வினை வினைக்குறிப்பு முற்றுக்களை ஓசை வேறுபாட்டான் பெயராகுமெனில்,
பெயராயவாற்றானே ஓசை வேறுபடும், ஓசை வேறுபாட்டான் பெயராகும் என ‘ஒன்றை
ஒன்று பற்றுதல்’ என்னும் குற்றம் தங்குமாதலின், வினைமுற்றும்
வினைப்பெயரும் வெவ்வேறு சொற்களே; அங்ஙனமாயினும், சொல்சுருங்குதல்
பொருட்டு எழுத்தொப்புமை நோக்கிப் ‘பல பொருள் ஒருசொல்’ என்ப. (சூ. வி.
பக். 54, 55)