‘எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இல’

ஒளகாரம் நீங்கலாகப் பதினோருயிர்களும் பதினெட்டு மெய்க் கண்ணும்
வந்து மொழிக்கு ஈறாம் என்ற பொதுவிதி யில், பின்னை விசேடித்துக்
கூறியவற்றை ஒழிந்தனவும் மொழிக்கு ஈறாதற்கண் ஒழிவில என்றவாறு.
அவையாவன தொ.எ. 70 முதல் 76 முடியக் கூறப்பட்டு உதாரணம்
காட்டப்பெற்ற ஞகரமும் நகரமும் வகரமும் சகரமும் பகரமும் ஒரு மொழிக்கும்
ஈறாகாத ஙகரமும் ஒழிந்த பன்னிரண்டு மெய்க்கண்ணும், எகரமும் ஒகரமும்
ஒளகாரமும் ஒழிந்த ஒன்பது உயிரும் ஏறி மொழிக்கு ஈறாம் எழுத்துக்க
ளாம்.
மொழிக்கு ஈறாய் வரும் என்று சொல்லப்பட்ட ஈறுகளில் சில இக்காலத்து
வழக்கில் இல்லை. ‘ஈற்றில் வரும் உயிர்மெய்கள்’ காண்க.
மொழிக்கு ஈறாம் எழுத்துக்கள் 161. இக்காலத்து உதாரணம் இல்லன
20.
மொழிக்கு ஈறாகாத ஏனைய எழுத்துக்களும் தம்பெயர் கூறுதற்கண் மொழிக்கு
ஈறாம். (தொ. எ. 77 நச்.)
சகர ஞகர நகர வகரங்களொடு கூடி இவ்விவ்வுயிர்கள் ஈறாகா என்று
விலக்கினாற்போல, ஏனைய மெய்களுக்கும் கூற வேண்டுவது முறையாதலின்,
அம்மெய்களொடு, முன்விலக்கப் பட்ட எ ஒ ஓள என்றமூன்றும் ஒழிந்த ஒன்பது
உயிர்களும் கூடி ஈறாகும் என்றவாறு.
மொழிக்கு ஈறாகாதன தம் பெயர் கூறவே, மொழிக்கு ஈறாகி வருதலுக்கு
ஆட்சி இல்லை ஆதலின், தொல்காப்பியனார் மொழிக்கு ஈறாகாதனவும் தம் பெயர்
கூறும்வழி மொழிக்கு ஈறாகும் என்று கூறவில்லை. (எ. ஆ. பக். 71)