எகின் புணர்ச்சி

எகின் என்பது ஒரு மரத்தையும் ஒரு பறவையையும் குறிக்கும் சொல்.
எகின் என்ற மரப்பெயர், ஆண் என்ற மரப்பெயர் போல, அம்முச்சாரியை
பெற்று ஏற்ற திரிபுகளுடன் வருமொழி யொடு புணரும்.
எ-டு: எகினங்கோடு, எகினநார், எகினவட்டை, எகினவியல்பு (வகரம்
உடம்படுமெய்) (தொ. எ. 336 நச்.)
பறவையைக் குறிக்கும் எகின் என்ற பெயர் வருமொழி வன்கணத்தொடு
புணரும்வழி, அகரமும் வல்லெழுத்துப் பேறும், சிறுபான்மை
மெல்லெழுத்துப்பேறும், இயல்பு கணங்களொடு புணரும்வழி அகரப்பேறும் எய்தி
முடியும்.
எ-டு : எகின் + கால் = எகினக்கால், எகினங்கால்; எகின் + நீட்சி
= எகினநீட்சி; எகின் + யாப்பு = எகினயாப்பு; எகின் + அடைவு =
எகினவடைவு (தொ.எ. 337 நச்.)
உருபுபுணர்ச்சிக்கண் எகின் என்ற பெயர் அத்தும் இன்னும் பெற்று
எகினத்தை, எகினினை- எனப் புணரும். (தொ.எ. 194 இள. உரை)
எகின், புளியமரம்- அன்னப்பறவை – என இரு பொருளது.