ஊகார ஈற்று வேற்றுமைப் புணர்ச்சி

ஊகாரஈற்றுப் பெயர் வன்கணம் வந்துழி மிக்கும், ஏனைய கணங்கள் வந்துழி
இயல்பாகவும் புணரும்.
எ-டு : கொண்மூக் குழாம்; கொண்மூநீட்சி, கொண்மூ வளர்ச்சி; கொண்மூ
வடைவு (வகரம் உடம்படு மெய்)
அவற்றுள் குற்றெழுத்தை அடுத்த ஊகாரஈறும், ஓரெழுத் தொரு மொழி
ஊகாரஈறும் எழுத்துப்பேறளபெடையும் பெறும்.
எ-டு : உடூஉக் குறை, உடூஉ ஞாற்சி, உடூஉ வன்மை, உடூஉ வடைவு;
தூஉக்குறை, தூஉநீட்சி, தூஉ வன்மை, தூஉ வாசை
உயர்திணைப்பெயரும் ஆடூஉக்கை மகடூஉக்கை – என்றாற் போல
எழுத்துப்பேறளபெடை பெறும்.
பூ என்னும் பெயர் எழுத்துப்பேறளபெடை உகரம் பெறாமல், வன்கணம்
வந்துழி வந்த வல்லெழுத்தும் அதற்கொத்த மெல் லெழுத்தும் பெற்றும்,
ஏனைக் கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும்.
எ-டு : பூக்கொடி, பூங்கொடி; பூநீட்சி, பூவண்ணம், பூவழகு
ஊ என்ற பெயர் னகரச்சாரியையும் அதனோடு அக்குச்சாரி யையும் பெற்று
வன்கணத்தொடு புணரும்.
எ-டு : ஊன் குறை, ஊன் செய்கை; ஊனக்குறை, ஊனச் செய்கை
ஆடூ, மகடூ – என்பன இன்சாரியை பெற்றுப் புணர்தலு முண்டு.
எ-டு : ஆடூவின் கை, மகடூவின் கை, செவி, தலை, புறம்- என முடிக்க.
(தொ. எ. 266-271 நச்.)