உரையிற் கோடல்

உரையிற் கோடல் என்பது உத்திவகைகளுள் ஒன்று. தொல் காப்பியம்
கூறியவற்றுள் இஃது இடம் பெற்றிலது. இவ் வுத்திவகையை உரையாசிரியன்மார்
எடுத்தாண்டுள்ளனர். நூற்பா வாயிலாக நேராக உணர்த்தப்படாத இன்றியமை யாத
செய்திகளை உரைவாயிலாக வெளியிடுவது இவ்வுத்தி வகை குறிப்பிடும்
செய்தியாம்.
எ-டு : மகரம் தன் அரைமாத்திரையின் குறுகும் என்பதே நூற்பாச்
செய்தி. அது கால்மாத்திரையாகக் குறுகும் என்பது உரையிற்கோடல். (தொ.எ.
13 நச். உரை)
‘புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை’ என்பதுதான் நூற்பாச் செய்தி.
உயிர் வருவழிப் புளியவிலை என சாரியை மகரம் கெடுதலும், புளியிலை என
அம்முச் சாரியை முழுதும் கெடுவதும் உரையிற் கோடல். (தொ.எ. 130
நச்.)
‘ஏ என் இறுதிக்கு எகரம் வரும்’ என்பதே நூற்பாச் செய்தி. ஏஎக்
கொட்டில் – ஏஎ நெகிழ்ச்சி – என எகரப்பேறு யாண்டும் கொள்ளாது ஏற்புழிக்
கொள்க என்பது உரையிற்கோடல். (தொ.எ. 227 நச்.)
தெவ் என்ற சொல் தொழிற்பெயர் போல உகரம் பெறும் என்பதே நூற்பாச்
செய்தி. தெவ்வுமாட்சி என்பதனொடு தெம் முனை எனவும் வரும் என்று
குறிப்பிடுவது உரையிற்கோடல். தெவ்வுமுனை ‘தெம்முனை’ எனவும் வரும்.
(தொ.எ. 382 நச்.)
ஐகாரம் ஒருமாத்திரை அளவிற்றாகக் குறுகும் நிலையுமுண்டு என்பதே
நூற்பாச் செய்தி. ஐகாரம் முதல் இடை கடை என்ற மூன்றிடத்தும் குறுகும்
என்பதும், ஒளகாரம் மொழி முதற் கண் குறுகும் என்பதும் உரையிற்கோடல்.
(தொ. எ. 57 நச்.)
தொ. எ. இளம்பூரணர் உரையிலும் இவ்வுத்திவகை 131, 141, 155, 211,
269, 471 முதலிய நூற்பாக்களில் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாற்றான், எடுத்தோத்தான் சொல்லப்படாமல், இலேசுக ளானும்
கொள்ளப்பட இயலாமல் உள்ள செய்திகள் உரையிற் கோடல் என்ற உத்திவகையான்
கொள்ளப்படுதலை உரை களில் காணலாம்.