உரையசைக்கிளவிப் புணர்ச்சி

கட்டுரைக்கண்ணே அசைத்த நிலையாய் வரும் ஆங்க என்னும் இடைச்சொல்
உரையசைக் கிளவியாம். கட்டுரை – புனைந்துரை;அசைத்தல் –
சேர்த்துதல்.
‘ஆங்கக் குயிலும் மயிலும் காட்டிக்
கேள்வனை விடுத்துப் போகி யோளே’
என்புழி, ஆங்க என்பது அங்ஙனே எனப் புனைந்துரைத்து நின்றது. சிறிது
பொருள் உணர்த்துவனவற்றை உரையசை என்ப. (தொ. சொ. 279 நச். உரை)
அகரஈற்று ஆங்க என்னும் உரையசை இடைச்சொல் வன்கணம் வந்துழி மிக்குப்
புணரும். ஆங்கக் கொண்டான் என வரும். (தொ. எ. 204 நச்.)