அடி சீர் வரையறையின்றி வரும் உரையாகிய செய்யுள் நடையவாகிய அடிகளைநடுவே மடுப்பது. சிலப்பதிகாரத்தில் இந்நடை பயிலக் காணலாம்.உரைப்பாட்டுத் தொடக்கத்தில் மடுக்கப்படுவது உண்டு.எ-டு : ‘குருவியோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்றுவைகி’ முதலாகிய 10 அடிகளில், பின் தொடரும் 12 அடி (சிலப். குன்றக்.):நேரிசையாசிரியப்பாவிற்கு முன்னர் இவ்வுரைப் பாட்டு மடை வந்தவாறு. இவ்வுரைப்பாட்டு மடை எதுகை மோனைத் தொடைகள் பயில நிகழ்கிறது.‘குமரியொடு வடஇமயத் தொருமொழியைத் துலகாண்ட சேரலாதற்கு’ (சிலப்.வாழ்த்துக்.) எனத் தொடங்கும் உரைப் பாட்டுமடையும் அவ்வாறேதொடக்கத்தில் அமைகிறது. எதுகைமோனைத் தொடை நயமும் பிற அடியமைப்பும்முற்பகுதியில் நிகழ்ந்தில. (அவை பிற்பகுதியில் அமைந்துள.)‘குடத்துப்பால் உறையாமையும் குவியிமில் ஏற்றின்மடக்கணீர் சோருதலும்… வருவதொன் றுண்டு’ (சிலப்.ஆய்ச்.)எனத் தொடங்கும் ஆறு அடிகளும் உரைப்பாட்டு இடையேமடுக்கப்பட்டமைந்தன. எதுகை மோனைத் தொடைகள் நயம் சிறப்ப அமைந்துள.இவ்வாற்றால், தொடை நயம் பெற்றோ பெறாமலோ அடிசீர் வரையறையின்றி,முன்னரோ இடையோ மடுக்கப்பெறுவது உரைப்பாட்டுமடை எனலாம்.