விதிகளுள் இவ்விதி இதற்குப் பொருந்தும், இதற்குப் பொருந் தாது என
உய்த்துணர்ந்து எவ்விதி எதற்குப் பொருந்துமோ, அவ்விதியை அதற்குக்
கொள்க.
விகுதிப் புணர்ச்சி: ‘றவ்வொடு உகர உம்மை’ (நன். 145) – சென்று
என்புழி இறந்தகாலமும், சேறு என்புழி எதிர்காலமும் பொருந்தும்.
பதப்புணர்ச்சி :‘அல்வழி இ ஐ’ (176) – ஆடி திங்கள்- என இயல்பாம்
என்றும், பருத்திக் குறிது – என மிகும் என்றும் கொள்ளற்க. பருத்தி
குறிது – என எழுவாய்க்கண் இயல்பாம் எனவும், ஆடித் திங்கள் – எனப்
பண்புத்தொகைக்கண் மிகும் எனவும் கொள்க.
சாரியைப் புணர்ச்சி: ‘பதமுன் விகுதியும்’ (243)- நாட்டினின்
நீங்கினான்- என ‘இன்என வரூஉம் வேற்றுமை யுருபிற்கு’ இன்சாரியை வரும்
எனவும், நாட்டுக்கண் இருந்தான் – எனக் கண்ணுருபிற்கு இன்சாரியை வாராது
எனவும் கொள்ளற்க. நாட்டின் நீங்கினான் – என இன் உருபிற்கு இன்சாரியை
வாராது என்றும், நாட்டின்கண் இருந்தான்- எனக் கண்ணுரு பிற்கு
இன்சாரியை வரும் என்றும் கொள்க.
உருபுபுணர்ச்சி: ‘ஒற்றுயிர் முதலீற்று’ (242)- நம்பிகண்- எனக்
கண்ணுருபு (வல்லொற்று) மிகாது எனவும், நம்பிக்கு- எனக் குவ்வுருபு
‘மன்’ என்ற மிகையால் வலி மிகும் எனவும் கொள்க.
இவ்வாறு பொருள் காணாமல், மேற்காணும் நால்வகைப் புணர்ச்சியுள்
ஒன்றற்குச் சொன்னவிதி மற்றொன்றற்கும் கொள்க எனப் பொருள்
கொள்வாருமுளர். (நன். 254 சங்கர.)