நிலைமொழியாகிய பெயர்கள், உருபுகளை வருமொழியாகக் கொண்டு இடையே,
ஈறுகட்கு ஏற்ப இன் அன் அத்து வற்று ஆன் ஒன்- முதலிய சாரியைகள்
பெற்றும் பெறாமலும் புணரும் புணர்ச்சி உருபுபுணர்ச்சியாம்.
எ-டு : மரம் + அத்து + ஐ = மரத்தை – அத்துச்சாரியை (தொ. எ. 185
நச்.); ஆ + ஐ = ஆனை- (இ)ன்சாரியை (தொ.எ. 120 நச்.); பொன் + ஐ =
பொன்னினை, பொன்னை; இன்சாரியை பெற்றும் பெறாதும் உருபொடு புணர்ந்தது.
(தொ.எ. 202 நச்.); மலை + ஒடு = மலை யொடு; சாரியை பெறாதும் ஈறு
திரியாதும் உருபொடு புணர்ந்தது. (தொ.எ. 202 நச்.)
உருபுகளின் புணர்ச்சி இடைச்சொற் புணர்ச்சியே எனினும் பெரும்பாலும்
வேற்றுமைப் புணர்ச்சியின் இயல்பில் அமையும். ஈண்டு உருபு என்றது,
எழுவாயும் விளியும் ஒழிந்த ஏனைய ஆறு உருபுகளையேயாம்.
உருபொடு புணரும் நிலைமைக்கண், யான் யாம் நாம் நீ நீர் தான் தாம்
-என்ற மூவிடப் பெயர்கள் முறையே என் எம் நம் நின் நும் தம் தம் – என
நெடுமுதல் குறுகி வருதல் வேற்றுமைப் பொருள் நோக்கம் பற்றி
நிகழ்வதாதலின் உருபுபுணர்ச்சிக்குச் சிறப்பாகக் கொள்ளப்படும். இது
பொருட்புணர்ச்சிக் கும்ஒக்கும். (நன். 242 சங்கர.)