உருபு திரிந்து உயிர்த்தல்

வரிவடிவு திரிந்து தோன்றுதல் என்பது பொருள். மெய்கள் உயிர்களொடு
கூடுமிடத்தே, அகரத்தொடு கூடியவழிப் புள்ளி நீங்கிய தம் பண்டை வடிவே
வடிவமாயும், ஏனைய உயிர்களொடு கூடும்வழித் தம் மெய்வடிவில் சிறிது
திரிபு கொண்டு மேல்விலங்கு கீழ்விலங்கு பெற்றும், கொம்பு பெற்றும்,
கொம்பும் காலும் பெற்றும், கால்பெற்றும் வரிவடிவில் எழுதப்படுதல்.
வருமாறு : கா, ஙா – கால்கள் பெற்றன. தி, தீ – மேல் விலங்கு
பெற்றன. பு, பூ – கீழ் விலங்கு பெற்றன. கெ, கே, கை – கொம்பு பெற்றன.
கொ, கோ, கௌ – கொம்பும் காலும் பெற்றன. (தொ. எ. 17 நச். உரை)