உருபுபுணர்ச்சி சிறப்பு விதி

எல்லாம் என்பது அஃறிணைக்கண் வற்றுச் சாரியையும், உயர்திணைக்கண்
நம்முச்சாரியையும் பெற்று உருபேற்கும்; உருபினை அடுத்து உம்மை
பெறும்.
வருமாறு : எல்லாவற்றையும், எல்லாநம்மையும்
எல்லாரும் எல்லீரும் – என்பன எல்லார் எல்லீர் என முறையே நின்று,
அவற்றின்பின் முறையே தம் நும் என்ற சாரியை பெற்று உருபேற்று
ஈற்றின்கண் உம்மை பெற்று முடியும்.
வருமாறு : எல்லார்தம்மையும், எல்லீர்நும்மையும்
மூவிடப் பெயர்கள் நெடுமுதல் குறுகி, என் எம் நம் நின் நும் தன் தம்
என நின்று உருபொடு புணரும். நான்கனுருபு ஏற்குமிடத்து இம் முதல்
குறுகிய பெயர்கள் அகரச் சாரியை பெறும். நான்கனுருபும் ஆறனுருபும்
ஏற்குமிடத்து, என் எம்- முதலிய தனிக்குறிலை அடுத்த ஒற்று ஈறாக அமைந்த
இச்சொற்கள் பொதுவிதிப்படி ஈற்று ஒற்று இரட்டமாட்டா.
வருமாறு : என்னை, என்னால், என்னின், என்கண்
எம், நம் – முதலியவற்றொடும் இவ்வாறே ஒட்டுக.
யான் + கு
> என் + கு
> என் + அ + கு
> என + கு =
எனக்கு
யான் + அது
> என் + அது =
எனது
பிறவற்றோடும் இவ்வாறே ஒட்டிக் காண்க
ஆ மா கோ – என்ற பெயர்கள் னகரச் சாரியை பெற்றும் பெறாமலும்
உருபேற்கும்.
வருமாறு : ஆனை, ஆவை; மானை, மாவை: கோனை, கோவை (வகரம் :
உடம்படுமெய்)
ஒருபது முதல் எண்பது ஈறாகிய எட்டு எண்ணுப்பெயர்களும் ஒன்பது என்ற
எண்ணுப்பெயரும் உருபொடு புணருமிடத்து, இடையே ஆன்சாரியை வரின், ‘பது’
என்பதில் பகரமெய் நீங்கலாக ஏனைய கெடப் புணர்ந்து முடியும்.
வருமாறு: ஒருபது+ஆன்+ ஐ
> ஒருப் + ஆன்+ ஐ = ஒரு பானை;
எண்பது+ ஆன் + ஐ
> எண்ப் + ஆன் + ஐ = எண்பானை;
ஒன்பது + ஆன் + ஐ
> ஒன்ப் + ஆன் + ஐ =
ஒன்பானை
ஆன்சாரியை இடையே வாராதொழியின், ஒருபதை – ஒருபஃதை, எண்பதை –
எண்பஃதை, ஒன்பதை – ஒன்பஃதை – என்றாற் போல முடியும்.
அவ், இவ், உவ் – என்ற சுட்டுப்பெயர்கள் உருபேற்புழி அற்றுச் சாரியை
பெற்று, அவற்றை -இவற்றை – உவற்றை – என்றாற் போல முடியும்.
அஃது இஃது உஃது – என்ற சுட்டுப்பெயர்கள் உருபேற்புழி, ஆய்தம்
கெட்டு அன்சாரியை பெற்றுப் புணரும்.
வருமாறு : அதனை, இதனை, உதனை – என்றாற் போல முடியும். அது இது
உது – என்பனவும் உருபேற் புழி அதனை – இதனை – உதனை – என்றாற் போலப்
புணரும். (நன். 245 – 251)