தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் ஆறாம் இயலாகிய உருபியல் 30
நுற்பாக்களை உடையது. அவை நுவலும் செய்தி- களாவன:
அ ஆ உ ஊ ஏ ஒள – என்ற ஆறு ஈற்றுப் பெயர்களும் வேற்றுமை யுருபுகளை
ஏற்கும்போது பொதுவாக இன்சாரியை பெறும். சில அகரஈற்றுப் பெயர்களும், யா
என்ற ஆகார ஈற்றுப் பெயரும் வற்றுச்சாரியை பெறும். சுட்டு முதல் உகரஈறு
அன்சாரியை பெறும். சுட்டு முதலாகிய ஐகார ஈறு வற்றுச் சாரியை பெறும்.
யாவை என்பதும் வற்றுச்சாரியை பெறும். நீ என்பது நின் என்றாகும். ஓகார
ஈறு ஒன்சாரியை பெறும். அஆ ஈற்று மரப்பெயர்கள் ஏழனுருபு ஏற்கும்போது
அத்துச் சாரியையும் பெறும். ஞ் ந் – ஈறுகள் இன்சாரியை பெறும்.
மகரஈறு அத்தும் இன்னும் பெறும். எல்லாம் என்பது அஃறிணைக்கண் வற்றும்,
உயர்திணைக்கண் நம்மும் பெறும். யான், யாம், நாம், தான், தாம் – என்பன
நெடுமுதல் குறுகும். எல்லாரும் என்பது தம்முச்சாரியையும், எல்லீரும்
என்பது நும்முச்சாரியையும் பெறும். அழன், புழன் – என்பன அத்தும்
இன்னும் பெறும். ஏழ் என்னும் எண்ணுப்பெயர் அன்சாரியை பெறும்.
குற்றியலுகர ஈறுகள் இன்சாரியை பெறும், அவற்றுள் எண்ணுப்பெயர்கள்
அன்சாரியை பெறும். அஃது இஃது உஃது என்பனவும், யாது என்பதும் அன்சாரியை
பெறும். திசைப் பெயர்க்கு முன் ஏழனுருபு வரின் இன்சாரியை பெறுதலும்,
பெறாமல் புணர்தலும் என இருதிறனும் உள.
இன்ன செய்திகள் நிலைமொழிகள் உருபுகளை வருமொழி யாகக் கொண்டு
புணரும்வழி நிகழ்வனவாகக் கூறப்பட்டுள.
உயிரீற்றுள் இகரஈற்றுப் பெயர்களும், நீ என்னும் பெய ரொன்றும்
ஒழிந்த ஈகாரஈற்றுப் பெயர்களும், அவை இவை உவை யாவை- என்ற நான்கும்
ஒழிந்த ஏனைய ஐகாரஈற்றுப் பெயர்களும், தான் யான் – என்ற இரண்டும்
ஒழிந்த ஏனைய னகரஈற்றுப் பெயர்களும், ஏழ் என்ற எண்ணுப்பெயர் ஒழிந்த
ஏனைய ழகரஈற்றுப் பெயர்களும் – இவை யெல்லாம் உருபொடு கூடுமிடத்துச்
சாரியை பெற்றும் பெறாமலும் புணரும்.
அஆஉஊஏஓஒள – என்ற ஏழ் உயிரீற்றுப் பெயர்களும், ஞ் ந் ம்வ்- என்ற
நான்கு மெய்யீற்றுப் பெயர்களும், ஒற்று இடை மிகும் ஈரெழுத்தொரு மொழிக்
குற்றியலுகரச் சொற்கள் ஒழிந்த ஏனைய பெயர்களும், தொடர்மொழிக்
குற்றியலுகர ஈற்றுப் பெயர்களும் உருபொடு கூடுமிடத்துச் சாரியை பெற்றே
வரும்.
நும் தாம் யாம் நாம் – என்ற மகரஈற்றுப் பெயர்களும், தான் யான் என்ற
னகரஈற்றுப் பெயர்களும், இடை ஒற்றுமிகும் ஈரெழுத்தொருமொழிக்
குற்றியலுகர ஈற்றுப் பெயர்களும் சாரியை பெறாமல் வரும்.
உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண்ணும் செல்லுமிடத்து அவை
அகத்தோத்துக்களில் மாட்டேற்றான் குறிக்கப்படும். (தொ. எ. 173 – 202
நச்.) (எ. ஆ. பக். 133)