உய்த்துவிடும், காட்டிவிடும் : சொல்லிலக்கணம்

உய்த்து என்ற வினையெச்சத்தொடும் காட்டி என்ற வினை யெச்சத்தொடும்
விடு என்ற விகுதி புணர்ந்து முதனிலைத் தன்மைப்பட்டு உய்த்துவிடு
காட்டிவிடு என்ற முதனிலை களாகி, பின்னர் உம் முதலிய விகுதிகளொடும்
சேர்ந்து, உய்த்துவிடும் காட்டிவிடும் – முதலிய வினைச்சொற்களை
உண்டாக்கும். இச் சொற்களைப் பரிமேலழகர் முதலாயினார் ‘ஒரு சொல்’
என்றமை, இவை உய்த்துவிடு காட்டிவிடு – என்று முதனிலைகளோடு இணைந்து
மேல் விகுதிகளொடு சேர்ந்து சொல்லை உண்டாக்குதலினாலேயாம். இங்ஙனம் விடு
போன்ற விகுதிகள் பகுதிகளோடு இணைந்து பகுதித் தன்மைப் பட்டு மேல்வரும்
விகுதிகளோடு இணைதல் வடநூலார்க்கும் உடன்பாடாம். (சூ. வி. பக். 42)