உயிர்: ஆட்சியும் காரணமும் நோக்கிய குறி

அகரம் முதல் ஒளகாரம் இறுவாயுள்ள பன்னிரண்டு எழுத்துக் களையும்
உயிர் என்ற பொதுப்பெயரானே வழங்குவது ஆட்சியாம். உயிர் பன்னிரண்டும்,
மெய் பதினெட்டனையும் இயக்கி உயிர்மெய்யாம் நிலையில் வரிவடிவின்றி
நிற்றலின், உயிர் என்ற பெயர் காரணம் பற்றியதாயிற்று. மெய்க்கு உயிராய்
நின்று மெய்களை இயக்கும் நிலையும் தனித்து நிற்கும் நிலையும்
உயிரெழுத்துக்கு உண்டு, இறை ஒன்றேயாய் நிற்கும் தன்மையும்,
பல்லுயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல.
(தொ. எ. 8 நச். உரை)