உயிர்மெய்

உயிரும் மெய்யும் இணைந்து தோன்றும் சார்பெழுத்து உயிர் மெய்யாம்.
மெய் உயிரொடு கூடுமிடத்து – அகரத்தொடு கூடும்வழிப் புள்ளி நீங்கிய தன்
வடிவே வடிவாகவும், ஆகாரத் தொடு கூடும்வழிப் புள்ளி நீங்கிய வடிவொடு
கால்பெற்றும், இகர ஈகாரங்களொடு கூடும்வழி மேல் விலங்கும் – உகர
ஊகாரங்களொடு கூடும்வழிக் கீழ்விலங்கும் – எகர ஏகார ஐகாரங்களோடு
கூடும்வழி அவ்வவற்றைக் குறிக்கும் கொம்பும் – ஒகர ஓகாரங்களொடு
கூடும்வழிக் கொம்பும் காலும், ஒளகாரத்தொடு கூடும்வழி அதற்கென உரிய
கொம்பொடு கூடிய காலும் பெற்று வடிவு திரிந்தும், மெய்யின்மேல் ஏறிய
உயிரெழுத் தின் மாத்திரையே தனக்குரிய மாத்திரையாய், உயிர் வடிவத்தைப்
பெறாது, உயிர்மெய் என்ற பெயருடன் மெய் யொலி முன்னும் உயிரொலி
பின்னுமாய் ஒலிக்கும் சார் பெழுத்து உயிர்மெய்யெழுத்தாம். பன்னிரண்டு
உயிரும் பதினெட்டு மெய்யுடன் பொருந்த 216 உயிர்மெய் யெழுத்துத்
தோன்றும். (நன்.89)