உயிர்மெய் முதலிய ஒன்பதும் சார்பெழுத்து ஆமாறு

உயிர்மெய் என்பது சார்பெழுத்து ஆமாறு ‘உயிர்மெய் சார்பெழுத்தாதல்’
என்ற தலைப்பில் காண்க.
கஃறீது – முஃடீது – என்பனவற்றை மெய்பிறிதாகிய புணர்ச்சி
என்றதனானும், ‘ஆய்தப்புள்ளி’ எனச் சூத்திரம் செய்தத னானும், இதனையும்
உடன்கூட்டி ஒற்றளபெடை பதினொன்று என்றதனாலும், ஆய்தம்
ஒற்றின்பாற்படுவதேனும், உயிர் ஏறாது ஓசைவிகாரமாய் இடம் பற்றி
நிகழ்வதொன்று ஆகலின், சார்பெழுத்தென ஒற்றின் வேறாயிற்று.
கோட்டு நூறும் மஞ்சளும் கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம் போல,
உயிரளபெடை நெடிலும் குறிலும் கூடிய கூட்டத்தில் பிறந்து பின்
பிளவுபடாது ஒலிக்கின்ற ஒன்று; எள் ஆட்டிய வழியல்லது எண்ணெய்
புலப்படாதவாறு போல, நெடிலும் குறிலும் கூடி ஒலிக்கும் கூட்டத்தல்லது
அது புலப்பட்டு நில்லாது. இயற்கை யளபெடையும் செய்யுட்குப் புலவர்
செய்துகொண்ட செயற்கை யளபெடையும் என இரண்டு திறத்ததாய், அலகு பெறாதும்
அலகு பெற்றும் அது நிற்பது. ஆதலின் உயிரளபெடை சார்பெழுத்தென உயிரின்
வேறா யிற்று.
ஒற்றளபெடை ஒருமாத்திரையாய் அலகு பெறுதலானும் பிறவாற்றானும்
சார்பெழுத்து என ஒற்றின் வேறாயிற்று.
சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங்கோலாகாது சந்தனக் கோலேயாம்.
அதுபோல, உயிரினது குறுக்கமும் உயிரேயாம் எனினும், புணர்ச்சி
வேற்றுமையானும். பொருள் வேற்றுமை யானும், சீரும் தளையும்
சிதையுமிடத்தே அலகுகாரியம் பெறாமையானும் குற்றிகரமும் குற்றுகரமும்
சார்பெழுத்து என உயிரின் வேறாயின.
கை – பை – மை – என்பனவும், கௌ – வெள – என்பனவும் பொருளைச்
சுட்டியவழிக் குறுகும். இங்ஙனம் (ஒரு மாத்திரை யும் ஒன்றரை
மாத்திரையுமாக) அளவு குறுகுதலானும், சீரும் தளையும் சிதையுமிடத்தே
அலகு பெறாமையானும் ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் சார்பெழுத்து என,
உயிரின் வேறாயின.
கால் மாத்திரையாக அளவு குறுகியொலிக்கும் மகரக்குறுக்க மும்
சார்பெழுத்து என ஒற்றின் வேறாயிற்று.
இவ்வாற்றான் உயிர்மெய் முதலாய ஒன்பதும் சார்பெழுத்து எனப்பட்டன.
(இ. வி. 18, 17, 19, 20, 16, 21, 22 உரை)