தமக்கெனப் பிறப்பிடம் ஒன்று தனிப்பட்ட முறையில் இன்றித் தாம்
சார்ந்த எழுத்துக்களின் பிறப்பிடமே தம் பிறப்பிட மாய்க் கொண்டு
ஒலிக்கும் குற்றியலிகரம்- குற்றியலுகரம் – ஆய்தம் – என்ற மூன்றுமே
சார்பெழுத்தாம்.
தனி எழுத்துக்களாகிய குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற
மூன்றும் தனித்தோ, அகரஉயிரைச் சார்ந்தோ இயங்கும் ஆற்றலின்றி
மொழியிடைப் படுத்தே உணரப்பட வேண்டுத லின் சார்பெழுத்தாயின. ஏனைய
உயிர்மெய் முதலியன சார்பெழுத்து ஆகா.
ஆல் என்புழி உயிர் முன்னும் மெய்பின்னும் மயங்கினாற் போல, லா
என்புழி மெய் முன்னும் உயிர் பின்னும் நின்று மயங்கினவே அல்லது,
உயிரும் மெய்யுமாகிய தம் தன்மை திரிந்து வேறாயின அல்ல;உயிர்மெய் ஆகிய
காலத்தும், குறின்மை நெடின்மை என்ற உயிர்த்தன்மையும் வன்மை மென்மை
இடைமை என்ற மெய்த்தன்மையும் தம் இயல்பின் திரிவுபடவில்லை. ‘உடல்மேல்
உயிர்வந்து ஒன்றுவது’ ‘பொன்மணி’ போல இயல்புபுணர்ச்சியேயாம்.
புணர்ச்சியில் மெய்யையும் உயிரையும் பிரித்துக் கொள்வர். ‘துணங்கை’
என்பது மெய் முதல் உயிர்ஈறு எனவும், ‘வரகு’ என்பது உயிர்த்
தொடர்மொழிக் குற்றியலுகரம் எனவும் கூறுமிடத்தே, உயிர் மெய் உயிராகவும்
மெய்யாகவும் பகுத்துக் கொள்ளப்படு கிறது. ஆதலின் கலப்பெழுத்தாகிய
உயிர்மெய் சார்பெழுத்து ஆகாது.
அளபெடை, நெட்டெழுத்தோடு இனமான குற்றெழுத்து ஒத்து நின்று
நீண்டிசைப்பதொன்று ஆயினும், மொழிக் காரணமாய் வேறுபொருள் தாராது
இசைநிறைத்தல் மாத்திரை பயத்ததாய் நிற்றலின் வேறெழுத்து என்று வைத்து
எண்ணப்படாததாயிற்று.
ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்
குறுக்கம் என்பன ஒரு காரணம் பற்றிக் குறுகின ஆதலின், சிறுமரம்
பெருத்துழியும் பெருமரம் சிறுத்துழியும் வேறொரு மரம் ஆகாதது போல,
வேறெழுத்து எனப்படா.
வடவெழுத்துள் உயிரெழுத்தின் இறுதிக்கண் வைத்த இரண்டும்,
ஒற்றெழுத்தின் இறுதிக்கண் வைத்த இரண்டும், வல்லெழுத்தின் முன்
மெல்லெழுத்து வந்து மயங்குழி அவ் வல்லெழுத்தோடு ஒப்ப இடையே தோன்றும்
எனப்பட்ட வியம எழுத்தும் என்னும் இவற்றையே சார்பெழுத்தாக வடநூலார்
கொண்டனர்.
கால்மாத்திரை பெறும் வன்றொடர்க் குற்றியலுகரம் மாத்திரைக்
குறுக்கம் பற்றித் தனியெழுத்தாகக் கொள்ளப்பட வில்லை. இவற்றை நோக்கச்
சார்பெழுத்து மூன்றேயாம் என்பது. (சூ. வி. பக். 29, 30)