உயிர்மெய்: ஒற்றுமை நயம், வேற்றுமை நயம்

ஒற்றுமைநயம் என்பதன்கண் பல எழுத்துக்கள் ஒரே இடத்தில் பிறப்பதும்,
பல எழுத்துக்கள் ஒலிஅளவான் ஒன்றாக இருத்தலும் கொள்ளப்பட்டுள்ளன.
உ ஊ ஒ ஓ ஓள- என்பன பல எழுத்துக்கள் ஒரே இடத்தில் பிறப்பதற்கு
எடுத்துக்காட்டு. காக்கை, கோங்கு – என்பனவற்றின் இடையிலுள்ள மெய்கள்
ஓரிடத்தில் பிறந்து ஒலியளவான் அரைமாத்திரை ஒலித்தல் என்னும் தன்மையில்
ஒன்று பட்டமை ஒற்றுமைநயமாம்.
தொடரும் எழுத்துக்கள் வெவ்வேறிடத்தில் பிறத்தல் வேற்றுமை நயம் என்ற
கருத்தில், வேய்க ஊர்க வீழ்க – என யரழ-க்கள் முன்பு ககரம் வருதல்
வேற்றுமைநயம் என்று கொள்ளப்பட்டது. (எ.ஆ)
உயிர்மெய்யினைத் தனி ஓரெழுத்தாகக் கோடல் ஒற்றுமை நயம்.
‘லகரம் றகரஒற்று ஆகலும் உரித்தே’ – பல என்பதன் லகரஉயிர்மெய்
‘லகரம்’ என்று குறிக்கப்பட்டதும்,
‘ஆயிடை வருதல் இகார ரகாரம்’ – ‘ரகாரம்’ என்பது உயிர்-மெய்யாய்த்
தொள்ளாயிரம் என்பதன்கண் வருதல் குறிக்கப் பட்டதும்,
‘முன்னர் தோன்றும் லகார மகாரம்’ – ‘பொலம்’ என்பதன் லகரஉயிர்மெய்
‘லகாரம்’ என்று குறிக்கப்பட்டதும்
என்னும் இவை ஒற்றுமை நயமாம். (தொ. எ. 214, 463, 356 நச்.)
(எ.ஆ.பக். 137)
இனி, உயிர்மெய்யினை மெய்யெழுத்தாகக் கோடல் வேற்றுமை நயம்
‘வல்லெழுத் தென்ப கசட தபற’ (தொ. எ. 19 நச்.) – இங்குக் ககரம் முதலிய
உயிர்மெய்கள் ககரஒற்று முதலியவற்றைக் குறிப்பிடுதல் வேற்றுமை
நயம்.
உயிர்மெய்யினை ஓரெழுத்தாகக் கொண்டு மாத்திரை கோடல் ஒற்றுமை நயம்.
அவ்விடத்து ‘உயிர்மெய்’ உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகை. உயிர்மெய்யினை ஒலி பற்றி ஈரெழுத்தாக எண்ணுதல் வேற்றுமை
நயம். வேற்றுமை கொள்ளுமிடத்தே ‘உயிர்மெய்’ உம்மைத்தொகையாம். (தொ. எ.
17 இள. உரை)
உயிர்மெய்க்கு மாத்திரை கொள்ளுங்கால், உப்பும் நீரும் போல
ஒன்றேயாய் நிற்றல்
ஒற்றுமைநயம். அதனை வேறுபடுத்துக்
கூறுங்கால் விரலும் விரலும் சேர நின்றாற்போல வேறாய் நிற்றல்
வேற்றுமைநயம். (தொ. எ. 18 நச்.
உரை)