உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

ஈற்றுக் குற்றியலுகரத்தை அடுத்த எழுத்து உயிர்மெய்யாக இருப்பின்
அச்சொல்லீற்றுக் குற்றியலுகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
எனப்படும். அஃது அல்வழிக்கண் வன்கணம் (மென்கணம், இடைக்கணம்- இவை)
வருமொழி முதற்கண் வருமிடத்து இயல்பாகப் புணரும்.
எ-டு : வரகு + கடிது = வரகு கடிது (வரகு ஞான்றது, வரகு
யாது)
வேற்றுமைக்கண் இயல்பாகவும் இன்சாரியை பெற்றும் புணரும்;சிறுபான்மை
வல்லினமெய் இரட்டும்.
எ-டு : வரகு +கதிர் = வரகுகதிர், வரகின் கதிர்; வெருகு + கண் =
வெருக்குக்கண்; எருது+ கால் = எருத்துக்கால்.
உயிர்த்தொடர்க் குற்றுகரம் டற மெய்களை ஊர்ந்து வரு மிடத்து,
வேற்றுமைப் புணர்ச்சியில், வருமொழி வன்கணம் வரின், அவ்வல்லின மெய்கள்
இரட்ட வல்லெழுத்து மிகும்; ஏனைக்கணம்வரின், அவ்விரட்டுதலோடு இயல்பாக
முடியும்.
எ-டு : முருடு+ கால், ஞாற்சி, யாப்பு, அடி = முருட்டுக்கால்,
முருட்டுஞாற்சி, முருட்டியாப்பு, முருட்டடி
முயிறு+ கால், நிறம், வன்மை, அடி = முயிற்றுக் கால்,
முயிற்றுநிறம், முயிற்றுவன்மை, முயிற்றடி.
சிறுபான்மை வேற்றுமைக்கண் இரட்டாமையும், அல்வழிக் கண் இரட்டுதலும்,
சிறுபான்மை இருவழியும் பிற ஒற்று இரட்டுதலும் உள. எ-டு : நாடு கிழவோன்
எனவும், காட்டரண் எனவும், வெருக்குக்கண் எருத்துமாடு எனவும் முறையே
காண்க. (நன். 182, 183)