உயிரெழுத்தின் இலக்கணம்

உயிரெழுத்து உதானன் என்னும் மேலெழும் ஓசைக்காற்றி னால் தோன்றி,
வாயுறுப்புக்களின் ஒற்றுதல் தொழிலின்றி இதழ்களின் கோணத்தால்
மிடற்றுவளியாலே, கண்டத்தி னின்று தம் நிலை திரியாமல் உயிர்ப்பொடு
பிறந்து செவிப் புலனாகும்; தனித்தும், மெய்யினை ஊர்ந்தும்,
சொல்லாயும், சொல்லுறுப்பாயும் அமைந்து பொருள் குறித்து நிற்கும்;
மெய்யெழுத்துக்கள் உயிர்மெய்யெழுத்து ஆவதற்குத் துணை யாய் அவற்றை
இயக்கி அவற்றின் பிறப்பிடமே இடமாகத் தோன்றி வரும்; தனித்து
இசைக்குங்கால், குறுமை நெடுமை கொள்ளும்;உயிர்மெய்க்குத்
துணையாகுங்கால், வன்மை மென்மை இடைமை கொள்ளும்; தனித்தும் மெய்யினை
ஊர்ந்தும் செய்யுட்கண் பல ஓசைகளை நிகழ்த்தி அலகு பெறும்;
பண்ணிசைக்கும் வண்ணத்திற்கும் காரணமாகி நிற்கும். அகரம் தவிர்த்த ஏனைய
உயிரெழுத்துக்கள் மெய் யொலிகளைச் சிறிது திரியச் செய்யும். யாவும்
அவற்றிற்குக் குறுமை நெடுமைகளைக் கற்பித்தலைச் செய்யும். உயிரெழுத்
துக்கள் மொழி முதற்கண் தனித்தும், இடையிலும் ஈற்றிலும் அளபெடையாகவும்,
விகாரமாகவும் வரும்; தம்முன் தாம் தொடர நேரின், உடம்படுமெய் பெற்றுத்
தொடரும்; உயிர் மெய்க்குத் துணை யாகி வருங்கால், வரிவடிவின்கண் தம்
கூறுகளை நிறுத்தித் தம் வரிவடிவை இழந்துவிடும். (தொ. எ. பக். 18, 19
ச. பால.)