உயிரீற்றின் முன் வன்கண முதல் மொழி

இயல்பினாலும் விதியினானும் இறுதியாக நின்ற (நிலை மொழியீற்று)
உயிர்களின் முன்னர் (வருமொழி முதலில்) வரும் கசதப-க்கள் பெரும்பாலும்
மிகும்.
விதி உயிரீறாவன:முன்னைய உயிரீறும் மெய்யீறும் ஒழிய உயிரீறாய்
நிற்பனவும், யாதானுமோர் உயிர் இறுதிக்கண் தோன்றி நிற்பனவும் ஆம்.
எ-டு: நம்பிக் கொற்றன் – உயர்திணைக்கண் இயல்பு இகர ஈறு வலி
மிக்கது; ஆடூஉக் குறியன் – உயர்திணைக்கண் விதி உகரஈறு வலிமிக்கது;
சாத்திப் பெண் – விரவுத் திணைக்கண் இயல்பு இகரஈறு வலி மிக்கது; தாராக்
கடிது, ஒற்றைக்கை – அஃறிணைக்கண் இயல்பு ஆகார ஈறும் விதி ஐகாரஈறும் வலி
மிக்கன.
வட்டக் கல், தாழக்கோல் – அஃறிணைக்கண் விதி அகரஈறுகள் வலி
மிக்கன.
இவை அல்வழிப் புணர்ச்சி.
நம்பிப்பூ, ஆடூஉக் கை – உயர்திணைக்கண் இயல்பு இகரஈறும் விதி
உகரஈறும் வலி மிக்கன. விளக்கோடு, கடுக்காய், ஆட்டுக்கால் –
அஃறிணைக்கண் இயல்பு அகர உகர ஈறும் விதிக் குற்றியலுகரஈறும் வலி
மிக்கன. இவை வேற்றுமைப் புணர்ச்சி.
ஆடிக் கொண்டான், ஆடாக் கொண்டான், ஆடூஉக் கொண் டான், ஆடெனக்
கொண்டான், ஆடக் கொண்டான், உண் பாக்குச் சென்றான், பூத்துக் காய்த்தது,
பொள்ளெனப் பரந்தது, சாலப் பகைத்தது, இருளின்றிக் கண்டான் – பல வகைத்
தெரி நிலை குறிப்பு வினையெச்சங்களின் உயிரீறுகள் வலிமிக்கன.
மற்றைச் சாதி, கடிக் கமலம், சொன்றிக் குழிசி, கங்கைக் கரை- இடை உரி
திசை வடசொற்களின் உயிரீறுகள் வலிமிக்கன.
நொக் கொற்றா, துக் கொற்றா – உயிரீற்று ஏவல் முன் வலி மிக்கன. (நன்.
165 சங்.)