உயிரீற்றின் முன் உயிர் வந்து புணருமாறு பற்றி வீரசோழியம் குறிப்பிடுவது

இகர ஈகார ஐகார உயிரீற்று நிலைமொழி முன்னர் உயிர் முதலாகிய வருமொழி
புணருமிடத்து இடையே யகார ஒற்று வந்து தோன்றும். இவை அல்லாத மற்ற
உயிரீற்று நிலைமொழி முன்னர் உயிர் முதலாகிய வருமொழி புணருமிடத்து
இடையே வகார ஒற்று வந்து தோன்றும். ஏகார ஈற்று நிலை மொழி முன்னர் உயிர்
முதலாகிய வருமொழி புணருமிடத்து யகார வகார ஒற்றுக்கள் இரண்டும் வந்து
தோன்றும். ஒரோ விடத்து நிலைமொழியினது ஈற்றில் நின்ற பதமாவது, உயிர்
மெய்யாவது, உயிராவது, ஒற்றாவது அழிந்து புணரும். (வீ.சோ. சந்திப்.
13)
வீரசோழியத்திலும் அதன் உரையிலுமே, உடம்படுமெய்யாம் எழுத்துக்கள்
பற்றியும், நிலைமொழி இன்ன ஈற்றுக்கு இன்ன உடம்படுமெய் என்பது
பற்றியும் முதன்முதலாக வரையறை கூறப்பட்டுள்ளது. இதனை யொட்டியே நன்னூல்
விதிக்கும்.
நிலைமொழியீறு கெட்டு முடிவது நேமிநாதத்தில் விளக்கப்
பட்டுள்ளது.
வருமாறு : ஒருபது + ஒன்று
> ஒருபது+ஆன் + ஒன்று =
ஒருபானொன்று – நிலைமொழியில் பது என்ற பதத்தின் ‘அது’
கெட்டது.
வாழிய + சாத்தா =வாழிசாத்தா – நிலை மொழி யில் யகர உயிர்மெய்
கெட்டது.
பனை + காய்
> பனை + அம் + காய்
> பன் + அம் + காய் =பனங்காய்
– நிலைமொழியில் ஈற்று ஐகாரஉயிர் கெட்டது.
மரம்+அடி
> மர+அடி =மரவடி – நிலை
மொழியீற்று மகரமெய் கெட்டது. (வகரம் : உடம்படுமெய்) (நேமி. எழுத். 19,
13 உரை)