உயிரது குறுமை நெடுமை அளவிற் கோடல்

உயிர் ஒரு மாத்திரை அளவிற்றாக ஒலிப்பின் குறில், அதே உயிர் இரண்டு
மாத்திரை அளவிற்றாக ஒலிப்பின் நெடிலாம். ஆகவே, ஒலியின் குறுக்கம்
நீட்டம் இவற்றைக் கொண்டே குறிலும் நெடிலும் தோன்றின. எனவே,
புணர்ச்சியிடத்துக் குறிலிணையை நெடிலாகக் கொள்ளலாம். உயிர்மெய்க்கும்
இஃது ஒக்கும்.
எ-டு : கோள்+ நிமிர்ந்தது = கோணிமிர்ந்தது
குறள் + நிமிர்ந்தது = குறணிமிர்ந்தது
தனிநெடிலை யடுத்த ஒற்றுக்களுக்குக் கூறும் புணர்ச்சிவிதி குறிலிணை
ஒற்றுக்கும், சிறுபான்மை குறில்நெடில் ஒற்றுக்கும் (வரால் +
நிமிர்ந்தது = வரானிமிர்ந்தது; கோல் + நிமிர்ந்தது = கோனிமிர்ந்தது)
கொள்ளப்படுதற்கு இதுவே அமைதியாம். (தொ. எ. 50 இள. 161 உரை)