உத்தேசம், விதேயம் என்பன

ஒவ்வொரு நுற்பாவின் தோற்றத்துக்கும் உத்தேசியமும் விதேயமும்
இன்றியமையாதன. உத்தேசியம் நுதலியது (கருதியது). விதேயம் –
உணர்த்தியது. தெரிந்த பொருளை நுதலித் தெரியாத பொருளைக் கூறுதலே
முறையாதலின், நுதலிய பொருளாகிய உத்தேசியம் மாணாக்கர்க்குத்
தெரிந்ததாயும், உணர்த்த வேண்டிய பொருளாகிய விதேயம் தெரியாததாயும்
இருக்கும். பொது இயல்பாய்த் தெரிந்தது நுதலிய பொருளாய் வருவதும்,
சிறப்பியல்பாய்த் தெரிய வேண்டியது உணர்த்த வேண்டிய பொருளாய் வருவதும்
ஆம்.
எ-டு : கோயில் சாத்தனால் கட்டப்பட்டது என்ற தொடரில், கோயில்
என்பது நுதலிய பொருளாகிய உத்தேசியம்; ‘சாத்தனால் கட்டப்பட்டது’ என்பது
உணர்த்திய பொருளாகிய விதேயம். ‘கோயில்’ தெரிந்ததாயினும், இன்னாரால்
கட்டப்பட்டது என்று தெரியாதானுக்கு உணர்த்திய செய்தி
தெரியாததாம்.
‘எழுத்தெனப்படுப அகர முதல னகர இறுவாய் முப்பஃது’ – இதன்கண்,
எழுத்து என்பது தெரிந்த பொருள்; முப்பஃது என்ற எண் தெரியாத பொருள்.
எழுத்து என்பதனைப் பொது வியல்பால் உணர்ந்த ஒருவனுக்குத் தமிழில்
வழங்கும் எழுத் துக்கள் அகர முதல னகர இறுவாய் அமைந்த முப்பதே –
என்றுணர்த்துவதே சூத்திரக் கருத்து ஆதலின், எழுத்து – உத்தேசியம்,
முப்பஃது- விதேயம் – பிறவும் அன்ன. (எ.ஆ.பக். 4,5)