மாணிக்கவாசகர் பாடல் பெற்ற தலம் இது. இன்று இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள இவ்வூர் பற்றிய கதை சுவையாக அமைகிறது. வேதம் படிப்பதற்காகப் பார்வதியைப் பூலோகத்தில் அவதரிக்கச் செய்து. வேதம் படிக்க வைத்து, மீண்டும் வேதப் பொருளை அவருக்கு உபதேசிக்கின்றான். இப்படி வேதத்தில் திரும்பவும் உபதேசம் பெற்ற மங்கை கல்யாண சுந்தரியாகக் கோயில் கொண்டிருக்கும் தலம் தான் உத்தர கோசமங்கை ( உத்தரம் என்றால் திரும்பப் பெறும் விடை ; கோசம் என்றால் வேதம் என்று பொருள் )
உத்தர கோசமங்கை யுளிருந்து
வித்தக வேடம் காட்டிய இயல்பு திரு- கீர்த்தி -48-49
உத்தரகோசமங்கைக் கரசே திரு- நீத்தல் – 3
நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊர் ஆகத் தந்தருளும் உத்தரகோசமங்கை
ஆரா அமுதின் அருந்தாளிணை பாடி (திரு – திருப்பொன் )
என. பண்ணின் மொழியாளொடு உத்தரகோசமங்கை மன்னி இருக்கும் சிவன் புகழ் பாடுகின்றார் மாணிக்கவாசகர், மாணிக்க வாசகரால் மிகச்சிறப்பாகப் பல இடங்களில் குறிக்கப்பெறும் இவ்விறையைப் பற்றி, பிற மூவரும் ஏன் பாடவில்லை அல்லது சுட்டவில்லை என்பது தெளிவாகவில்லை. எனினும் மங்கை என்பது மங்கலம் என்ற பெயரின் மரூஉவாக இருக்க வாய்ப்பு இருக்கும் நிலையில் சிறப்பு அடை புராணக் கருத்து சார்ந்து இப்பெயர் அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.