உண்மை செப்பும் உண்டு என்னும் சொல்லின் புணர்ச்சி

உண்மை செப்புதலாவது, ஒரு பொருள் தோன்றுங்கால் தோன்றி அது
கெடுந்துணையும் உண்டாய் நிற்கின்ற தன்மை யாகிய பண்பை உணர்த்துதல். இது
‘பொருண்மை சுட்டல்’ எனவும்படும். (தொ. சொ. 66 சேனா.)
உண்டு என்பது நிலைமொழியாக வருமொழி முதலில் வன்கணம் வரின், உண்டு
என்பது இயல்பாகப் புணர்தலும், உண்டு என்பதன் இறுதி கெட்டு ணகரம் ளகர
ஒற்றாகி உள் என நின்று வருமொழியொடு புணர்தலும் என்ற இரு நிலைமையும்
பெறும்.
வருமாறு : உண்டு+பொருள் = உண்டு பொருள், உள் பொருள்.
உண்டு என்பதன் முன் இயல்புகணம் வருவுழிக் கேடும் திரிபும் இன்றி,
உண்டு ஞானம் – உண்டு வட்டு – உண்டு அடை (உண்டடை) – என இயல்பாகப்
புணரும். (தொ. எ. 430 நச்.)