உடம்படுமெய்

நிலைமொழியீற்று உயிரையும் வருமொழிமுதல் உயிரையும், உயிரோடு
உயிர்க்கு மயக்கம் இன்மையின், இணைத்து வைத்தற்கு இடையே வரும் மெய்
உடம்படுமெய் எனப்படும். ‘உடம்படுமெய் வேண்டும்’ என்னாது ‘உடம்படுமெய்
வரையார்’ என்று தொல்காப்பியனார் கூறுதலின், உடம்படு மெய் யாண்டும்
பெற்றே வரல் வேண்டும் என்ற வரையறை இல்லை. இதனை இளம்பூரணர்,
நச்சினார்க்கினியர், இலக்கண விளக்க ஆசிரியர் முதலியோர்
குறிப்பிட்டுள்ளனர். இது கன்னட மலையாள மொழிகளிலும்
கொள்ளப்படுகிறது.
இ ஈ ஏ ஐ – முன் யகரமும், அஆஉஊஓஒள முன் வகரமும் வருகின்றன. ஆகார
ஓகாரங்களின் முன் ஒரோவழி மாயிரு ஞாலம் – கோயில் – என்றாற்போல, யகர
உடம்படுமெய் வருதலும் கொள்க.
‘கோமா முன்வரின் யகரமும் குதிக்கும்’ என்று முத்துவீரியம்
மொழிகிறது. (புணரியல் 24)
இடையண்ணத்தில் பிறப்பனவாகிய இஈஎஏஐ- இவற்றுக்கு முன், இடையண்ணத்தில்
பிறப்பதாகிய யகரமும், இதழில் பிறப்பனவாகிய உ ஊ ஒ ஓ ஒள –
இவற்றுக்குமுன் இதழில் பிறப்பதாகிய வகரமும் உடம்படுமெய்யாக
வருகின்றன.
அஆ- இரண்டும் இவ்விடங்களுள் ஒன்றினும் பிறப்பன அல்ல ஆயினும், வாய்
அங்காந்து ஒலிக்கப் பிறக்கும் அவ்வொலி இதழிடையேயன்றி ஒலிப்பது
இயலாதாகலின், அவ்வெழுத் துக்களின் முன் இதழில் தோன்றும் வகரம்
வருவதாயிற்று.
அ ஆ இ ஈ எ ஏ ஐ ஓ – இவ்வீறுகளுக்கு முன் யகரம் வரும் எனவும், உஊஓஒள-
இவற்றின் முன் வகரம் வரும் எனவும் சப்தமணி தர்பணம் (55) கூறுகிறது.
தெலுங்கு மொழியிலும் அகரஆகார ஈறுகளுக்கு முன் யகரம் வருகிறது.
நிலைமொழியீறு தாலவ்யமானால் யகரமும், ஓஷ்ட்ரஸ்வர மானால் வகரமும்
உடம்படுமெய்யாக வரும் என்று கேரளபாணிநீயம் கூறுகிறது.
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்ற நான்கு மொழி களிலும் ஆகார
ஒளகாரங்களின் முன்னர் யகரம் வருதல் அறியப்படுகிறது. இவற்றின் முன்
யகரம் வருமொழி நோக்கி வந்தது எனல் அமையும். வடமொழியில் இகர
ஈகாரங்களின் முன்னர் இகர ஈகாரம் அல்லாத பிற உயிர் வரின், அந்த இகர
ஈகாரங்கள் யகரம் ஆகும்; உகர ஊகாரங்கள் இவ்வாறே வகரம் ஆகும்.
எ-டு : ததி + அத்ர = தத்
யத்ர; நதீ + ஏஷா = நத்
யேஷா; மது + அத்ர = மத்
வத்ர; வது + ஆனனம் = வத்
வானனம்
தமிழில் இ ஈ உ ஊ கெடாமல் நிற்க, முறையே யகர வகரம் வரும்.
வடமொழியில் அவை கெட யகர வகரம் வரும். இஃதொன்றே வேறுபாடு. (எ. ஆ. பக்.
107, 108, 109)
‘னகார
விறுவாய்’ – தொ.எ.9; ‘அவ்

வியல் நிலையும்’ – எ.12;
‘ஆ
யிரு திணையின்’ – சொ. 1;
‘ஆ
யிரண் டென்ப’ – எ.117; ‘ஆ

வின் இறுதி’ – 120;
‘இல்லா
வெல்லா மெய்யும்’ – 17;
‘நொடி
யென வவ்வே’ – 7; ‘கூட்டி
யெழுஉதல்’ – 6; ‘ஈ
யாகும்’ – சொ. 123; ‘உரு
வாகி’ – எ.17; ‘அம்மூ
வாறும்’ – 22; ‘ஏ ஒள
வென்னும்’ – எ.173; ‘உளவே

யவ்வும்’ – சொ. 68;
‘மூப்பே
யடிமை’ – 57;
‘உயர்திணைப்பெயரே
யஃறிணை’ – 117; ‘அரை
யளபு குறுகல்’ – எ.13; ‘ஓ
ஒள
வென
விசைக்கும்’ – 87
அ உ ஊ ஓ ஒள – இவற்றின் பின்னர் வகரமும், இ ஈ ஏ ஐ – இவற்றின்
பின்னர் யகரமும், ஆவின் பின்னர் யகரவகரங் களும் வரும் என்பதைக்
காண்கிறோம். (எ. கு. பக். 144)
‘உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்’ எனத் தொல்காப்பியனார்
பொதுப்பட ஓதினாரேனும், உயிர்களை உடம்படுத்தற்குரியன இடப்பிறவியான்
அவ்வுயிரோடு ஒத்த இடையெழுத்து என்பதும், அவற்றுள்ளும் மொழி முதற்கண்
வருதற்குரியன யகர வகரங்களே யாதலின் அவையே ஈண்டைக்கு வரப்பெறும்
என்பதும் பெறப்படும். அவற்றுள் ளும் பெரும்பாலும் இஈஏஐ – முன்
யகரமும், ஏனை உயிர் களின் முன் வகரமும் வரும் என்பது ஏற்புழிக்கோடல்
என்பதனால் பெறப்படும். (சூ. வி. பக். 42)
உயிரோடு உயிர்க்கு மயக்கம் இல்லாததினாலே, அவ்விரண்டும்
உடன்படுதற்பொருட்டு இடையே வரும் மெய்யினை உடம்படுமெய் என்றார். இனி,
வரும் உயிர்க்கு உடம்பாக அடுக்கும் மெய் உடம்படுமெய் எனினும் அமையும்.
இந்த உடம்படுமெய்யின் தோற்றம், தோன்றல் விகாரம் போலாகாது, இடைவிட்ட
உலோகங்களை இணைக்கும் பற்றாசு போல வருதலின், இயல்பு புணர்ச்சி. (நன்.
162 இராமா.)
நிலைமொழியீற்றுயிர் இ ஈ ஐ – என இருப்பின் யகர உடம்படு மெய்யும்,
ஏனைய உயிரீறுகளின் முன் வகர உடம்படு மெய்யும், ஏகார ஈற்றின் முன்
இவ்விரண்டும் இடையே வரும்.
எ-டு : மணி + அழகிது = மணியழகிது; ஆ + அழகிது = ஆவழகிது; சே +
அழகிது = சேயழகிது, சேவழகிது (162 இராமா.)