உடம்படுமெய் செய்கை ஓத்தில் கூறப்படாமை

நிலைமொழி உயிரீறாக வருமொழி உயிர் முதலாக வரின், உயிரோடு உயிர்க்கு
மயக்கம் இன்மையான், அவ்வீருயிர் களையும் இணைத்து உடம்படுத்தற்கு இடையே
அடுத்துவரும் மெய்களாகிய யகர வகரங்கள் உடம்படுமெய்களாம். ஆகவே, விண்+
அத்து = விண்வத்து – என நிலைமொழியீற்றில் மெய் நிற்புழி இடையே வரும்
வகரம் எழுத்துப்பேறேயன்றி உடம்படுமெய் அன்றாம்.
தொல்காப்பிய எழுத்ததிகாரம் முதல் நான்கு இயல்கள் கருவி ஓத்து;
அடுத்த ஐந்து இயல்களும் செய்கை ஓத்து.
உடம்படுமெய் இருமொழிகளையும் உடம்படுவித்தற்கு வரும் கருவியாதலின்,
தொல்காப்பியனார் உடம்படுமெய்யைக் கருவி ஓத்து நான்கனுள் நான்காவதாகிய
புணரியலில் கூறி னார். இது புணர்மொழிச் செய்கையாயின், செய்கை ஓத்தில்
கூறப் பட்டிருக்கும். (சூ. வி. பக். 42)
ஆதலின், உடம்படுமெய் பெறுதல் இயல்புபுணர்ச்சி வகையுள் ஒன்று.