‘விண்வத்துக் கொட்கும்’ என மெய்யீற்றின் முன்னரும் உயிர் வரின்
உடம்படுமெய் பெறும் என்பாருமுளர். உயிர்ஈற்றின் முன் உயிர்முதல்வரின்,
உயிரோடு உயிர்க்கு மயக்கம் இன்மை யின் புணர்ச்சியின்றி விட்டிசைத்து
நிற்கும் ஆதலின், உடம் படாத அவ்விரண்டும் உடம்படுதற்பொருட்டாக இடையே
வரும் மெய்யை உடம்படுமெய் என்ப ஆதலின், வரும் உயிரேறி
ஒற்றுமைப்பட்டுப் புணர்தற்குரிய மெய்யீற்றின் வழித்தோன்றும் மெய்யை
உடம்படுமெய் என்பது பொருந் தாது. உடன்படல் ‘உடம்படல்’ என மரீஇயிற்று.
‘உடம்பா டிலாதவர் வாழ்க்கை’ (குறள் 890) எனவருதல் காண்க. உயிரோடு
உயிர்க்கு மயக்கம் இன்மையின், வரும் உயிர்க்கு உடம்பாக அடுக்கும் மெய்
உடம்படுமெய் எனப் பொருள் கூறுதலும் ஒன்று. (நன். 162 சங்கர.)