சொற்களில் ரகரழகர ஒற்றுக்கள் நீங்கலான ஏனைய பதினாறு ஒற்றுக்களும்
தம்முன் தாமே வந்து சொல்லமையும் நிலையில் அவற்றின் சேர்க்கை உடனிலை
மெய்ம்மயக்கம் எனப்படும்.
எ-டு : காக்கை எங்ஙனம், பச்சை, மஞ்ஞை, பட்டை, கிண்ணம், தத்தை,
வெந்நெய், உப்பு, அம்மை, வெய்யர், எல்லி, தெவ்வர், கள்ளி, கொற்றி,
கன்னி – என முறையே காண்க. (தொ. எ. 30 நச்.)
ரழ – அல்லாத மெய்கள் ஒருமொழியிலும் இருமொழியிலும் தம்மொடு தாம்
மயங்கும் மயக்கம் உடனிலை மயக்கமாம்.
எ-டு : பக்கம், தச்சன், பட்டம், சத்தம், கப்பம், செற்றம்,
அங்ஙனம், அஞ்ஞானம், கிண்ணம், வெந்நீர், கம்மம், கன்னம், வெய்யர்,
வெல்லம், தெவ்வர், கள்ளம். (நன். 118)